×

வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை காட்பாடியில் அதிகபட்சமாக 50 மி.மீ பதிவு

வேலூர், நவ.23: வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 50 மி.மீ மழை பதிவானது. தமிழகத்தில் கஜா புயலில் சிக்கி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு அடங்குவதற்குள் தமிழகத்தில் 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே வேலூர், ஆற்காடு, வாலாஜா, வாணியம்பாடி, காட்பாடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்ந்து இரவு வரை நீடித்த மழை கனமழையாக மாறியது. தொடர்ந்து விடிய, விடிய பெய்தது.

இதையடுத்து நேற்று பகல் நேரமும் விடாமல் மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். இம்மழையின் காரணமாக கன்சால்பேட்டை, திடீர் நகர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. ஆற்காடு சாலை, வேலூர் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கால்வாய்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் குளம்போல் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் ஓடியது. மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மழையின் போக்கை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக நேற்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை (இன்று) மழையின் அளவை பார்த்து விடுமுறை அளிப்பதா? என்று முடிவு செய்யப்படும்’ என்றார். மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 50 மி.மீ மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை விவரம்: வேலூர் 36.4 மி.மீ, அரக்கோணம் 32 மி.மீ, ஆற்காடு 27.8 மி.மீ, காவேரிப்பாக்கம் 25.4 மி.மீ, ஆம்பூர் 22.4 மி.மீ, சோளிங்கர் 20.4 மி.மீ, வாணியம்பாடி 19.2 மி.மீ, மேல்ஆலத்தூர் 18.6 மி.மீ, வாலாஜா 17.2 மி.மீ, குடியாத்தம் 13.2 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்த மழையளவு 387 மி.மீ. சராசரி மழையளவு 21.50 மி.மீ.

Tags : Vellore district ,buddy ,Vidya ,
× RELATED குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி...