×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது கனமழை

காஞ்சிபுரம், நவ.23: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சீராக பெய்தது. நேற்று அதிகாலை முதல் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். மேலும் தொடர் மழையால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஏரிகள் நிறைய உள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால், ஏரிகளுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.

வட மாவட்டங்களுக்கு தென் மேற்கு பருவ மழையின் போது, குறைந்த அளவே மழை கிடைக்கும். இதனால், வறட்சி காலங்களில் இருந்தது போன்றே, அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காட்சியளிக்கும். இதன் காரணமாக, வடகிழக்குப் பருவமழையை நம்பியே வடமாவட்ட விவசாயிகள் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போனதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கஜா புயலால் மழைப்பொழிவை எதிர்பார்த்திருந்த நிலையில் அதிலும் மழை இல்லாததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், கடந்த 2 நாட்களாக பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வழக்கம்போல காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் ரெட்டை மண்டபம், மேட்டுத்தெரு, செட்டித்தெரு, விளக்கடி கோயில் தெரு, மூங்கில் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் டூ வீலரில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Tags : Vadai Vadiya ,Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...