×

செங்கல்பட்டு, மறைமலைநகர் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் பாதிப்பு

செங்கல்பட்டு, நவ.23: செங்கல்பட்டு, மறைமலைநகர் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஏரிகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். நெடுஞ்சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், விஞ்சியம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறியது. இதனுடன் பஜார் பகுதி மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியது. இதனால், நெடுஞ்சாலையில் மழைநீர் பெருகி இடுப்பளவுக்கு தேங்கியது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் தத்தளித்து சென்றன. இதையொட்டி இடுப்பளவு தண்ணீர் சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி, மறைமலைநகரில் இருந்து சிங்கப்பெருமாள்கோயில் - பரனூர் வரை நேற்று மதியம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தன. சிறிய வகை கார்கள், இரு சக்கர வானங்கள் தண்ணீரில் மூழ்கி ஆங்காங்கே நின்றுவிட்டன. அதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. மேலும் பஸ்களும் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், அதனுள் மழைநீர் ஓழுகியது. இதில் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், சிங்கப்பெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள கால்வாய்கள் தூர்ந்து போனது. இதனால், அதில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவுநீர் கலந்தது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிப்படைந்த பொதுமக்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுவே இருந்த சென்டர் மீடியனை இடித்து தள்ளினர். தகவலறிந்து கலெக்டர் பொன்னையா, மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், சர்வீஸ் சாலையில் உள்ள கால்வாய் அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம், ஊழியர்களை வைத்து சரி செய்தனர். அதன் பின்னர் மழைநீர், செட்டிபுண்ணியும் ஏரிக்கு சென்றது. இதையடுத்து நெடுஞ்சாலையில் இருந்த மழைநீர் படிப்படியாக குறைந்ததால், போக்குவரத்து நெரிசல் சீரானது. இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் பெய்த கனமழையால் அனுமந்தபுத்தேரி, குண்டூர் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் வேதாச்சலம் நகர், வீரக்குடி வேளாளர் தெரு, காண்டிபன் தெரு ஆகிய பகுதிகளில் புகுந்தது. இதனால், மழைநீர் தெருக்களில் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் அருகே சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. ஜெசிகே நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொண்டதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இதையறிந்ததும், கலெக்டர் பொன்னையா, நகராட்சி கமிஷனர் மாரிசெல்வி, பொதுப்பணி துறை அதிகாரி பிரபு ஆகியோர் அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அடைப்பு ஏற்படுட்டுள் கால்வாய்களை உடனுக்குடன் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்க வேண்டும். கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். ஜெசிகே நகர் பகுதியில் வெள்ளம் சூழாமல் இருக்க, பொதுப்பணி துறை சார்பில் மழைநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், செங்கல்பட்டு தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 69 ஏரிகளில், கொளவாய் ஏரி, குண்டூர் ஏரி ஆகியவை 80 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. மறைமலைநகர் நின்னக்கரை ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி ஆகியவை முழுவதுமாக 100 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.

பழமுத்தூர் ஊராட்சியில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பழமுத்தூர் ஊராட்சி. இந்த பகுதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய படாளம் அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக ஊராட்சிக்குட்பட்ட ஈவெரா பெரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மதுராந்தகம் வருவாய்த்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுராந்தகம் கோட்டாட்சியர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று வீடுகளில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்ற பொக்லைன் மூலம் மழை நீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர் செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறும் போது, ‘’மழை நீர் செல்லும் கால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் மழை நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்படா வண்ணம் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அமைச்சர்களின் உறுதி மழைநீரில் கரைந்தது
பொதுமக்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக மழை காலங்களில் நெடுஞ்சாலையின் குறுக்கே இடுப்பளவு தண்ணீர் ஆறாக ஓடுகிறது. கடந்த ஆண்டு மழையின்போது, அமைச்சர்கள் அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த பகுதிகளைஆய்வு செய்தனர். அப்போது, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க ₹5 கோடியில் சிறு மழைநீர் தரைப்பாலம் அமைக்கப்படும் என கூறி உறுதியளித்தனர். இதைதொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து கால்வாய் அமைக்கப்படும் என கூறினர்.ஆனால் ஒரு ஆண்டாக எந்த பணியும் தொடங்கவில்லை. அதற்குள் மழை வந்து மீண்டும் சாலையின் நடுவே குளம்போல் தண்ணீர் ஓடுகிறது. அமைச்சர்களின் உறுதிமொழி அந்த தண்ணீரில் அடித்து சென்று கரைந்துவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் இந்த பகுதியில் பிரச்னை தீராது என்றனர்.


இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருப்போரூர், நவ.23: கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. மூன்றாவது நாளாக நேற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் யாரும் வராமல் மாமல்லபுரம் நகரம் வெறிச்சோடியது. மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புராதனச் சின்னங்களை சுற்றி மழை நீர் தேங்கி உள்ளதால் அவற்றை அருகில் சென்று பார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவற்றை பராமரிக்கும் தொல்லியல் துறை இதுபோன்ற மழைக்காலங்களில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுவர். தற்போது மூன்று நாட்களாக மழை பெய்தும் இதுபோன்று மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்ற தொல்லியல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என சுற்றுலாப் பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த தொடர் மழையின் காரணமாக முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிபுலம், தேவனேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

Tags : areas ,Cheramalai Nagar ,Chengalpattu ,flooding homes ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...