×

திருப்போரூர் அருகே மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆர்.ஐ. அலுவலகத்தை பழங்குடி மக்கள் முற்றுகை

திருப்போரூர்,நவ.23 :திருப்போரூர் அருகே வெள்ள நீர் வெளியேறும் கால்வாயை சிலர் ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருளர், பழங்குடி இன மக்கள் ஆர்.ஐ.அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கரும்பாக்கம்  ஊராட்சியில் அடங்கிய பூயிலுப்பை கிராமத்தில் இருளர், பழங்குடி இனத்தைச்  சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த  மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இவர்களின் குடியிருப்பு  பகுதியைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. வெள்ள நீர் வெளியேறும்  கால்வாயினை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளதாக இருளர்  பழங்குடி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த வேலியை அகற்றி கால்வாயை  வெட்டினால் வெள்ள நீர் வெளியேறும் என்று கூறி நேற்று கரும்பாக்கம் வருவாய்  ஆய்வாளர் அலுவலகத்தை இருளர் பழங்குடி இன மக்கள் திடீர் என முற்றுகையிட்டனர். இதுகுறித்து  தகவலறிந்ததும் திருப்போரூர் வட்டாட்சியர் இராஜ்குமார் கரும்பாக்கம் சென்று  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருளர் குடியிருப்புக்கு செல்லும்  சாலை, மற்றும் மழை நீர் வடிகால்வாயை அகற்ற வேண்டும் என இருளர் மக்கள்  வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம்  வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை நீர் வெளியேறும் வகையில்  கால்வாய் தூர்வாரப்பட்டது. இதனை தொடர்ந்து இருளர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை     
திருப்போரூர் வட்டத்தில்  திருப்போரூர், தண்டலம், பஞ்சந்தீர்த்தி, கரும்பாக்கம், மானாம்பதி, பையனூர்,  வட நெம்மேலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளர் மக்கள் வசித்து  வருகின்றனர். இவர்கள் தற்போது கூலி வேலை மற்றும் பாம்பு, எலி பிடிக்கும்  தொழிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் மழைக்காலம் முடியும் வரை இவர்களை  முகாம்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும்  எழுந்துள்ளது.

Tags : RI ,rain water channel ,Tiruppur ,siege ,
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...