×

திருத்தணி நகர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்டனர்

திருத்தணி, நவ. 23: திருத்தணி அருகே பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருத்தணி நகரத்தில் சமீப காலமாக பைக் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் திருத்தணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில், எஸ்.ஐ., இளங்கோ, தலைமை காவலர் நீலகண்டன் உட்பட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு பைக் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருத்தணி சன்னதி தெரு, சித்தூர் சாலை ஆகிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவெண் இல்லாத மூன்று பைக்குகளில், 3 பேர் வேகமாக வந்தனர்.

அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவை திருட்டு பைக்குகள் என்பதும், இவர்கள் தொடர் பைக் திருட்டில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் பெருமாள் ராஜூபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27), குருவராஜபேட்டையை சேர்ந்த பாட்ஷா என்கிற பாஸ்கரன் (21), ஆர்.கே.பேட்டை அமுதரெட்டி கண்டிகையை சேர்ந்த  பன்னீர்செல்வம் (21) என்பதும் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து எட்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : bike rickshaws ,area ,Tiruttani Nagar ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு