×

பரங்கிமலை - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: 3 மணி நேரம் பயணிகள் அவதி

சென்னை: பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை நேற்று காலை பாதிக்கப்பட்டதால், 3 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் தற்போது மேம்பாலம் மற்றும் சுரங்க வழிப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 2016ல் ஆலந்தூர் - பரங்கிமலை இடையே 1.3 கி.மீ தூரம் வரையில் மேம்பாலம் வழியே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் பரங்கிமலையில் இருந்து ஒரு மெட்ரோ ரயில் ஆலந்தூர் நோக்கி செல்ல தயாரானது. அப்போது, திடீரென சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயிலில் ஏறி 10 நிமிடங்களுக்கு மேலாகியும் ரயில் புறப்படாததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 3 மணி நேரமாகியும் சிக்னல் கோளாறு சரிசெய்யப்படவில்லை.

பின்னர், கூடுதல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிக்னல் கோளாறு மற்றும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தனர். இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கால்டாக்சி, கேப், வேன் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, இதுபோன்ற சிக்னல் கோளாறு பிரச்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நிகழ்ந்து வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் விரைவு சேவை என்பதாலேயே பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் சேவையை பயண்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் கூட முறையான பராமரிப்பு இல்லாமல் இதுபோன்ற சிக்னல் கோளாறுகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது பயணிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பருவமழை காலங்களில் கூடுதல் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்தை பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : dam ,Parangaimalai - Alandur ,passengers ,
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...