×

பணியாளர் பற்றாக்குறையால் பஸ்நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தம்

விருதுநகர், நவ. 22:விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 51 டவுன் பஸ்கள், 20 புறநகர் பஸ்கள், 6 ஸ்பேர் பஸ்கள் என 77 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவைகளை மூன்று ‘ஷிப்ட்’ அடிப்படையில் இயக்க, ஒரு பஸ்சுக்கு 3 டிரைவர், 3 நடத்துனர் தேவைப்படுகின்றனர். ஆனால், விருதுநகர் பணிமனையில் 194 நடத்துனர், 216 டிரைவர்கள் மட்டும் பணியில் உள்ளனர். இதில், நடத்துனர்கள் பலர் மாற்றுப்பணியில் காசாளர், டிக்கெட் பராமரிப்பாளர், அலுவலக பணிகளில் உள்ளனர். பணியாளர் பற்றாக்குறையால், பஸ்களை இயக்குவதில் அடிக்கடி சுணக்கம் ஏற்படுகிறது. விருதுநகர் பழைய பஸ்நிலையத்திலிருந்து காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை பஸ்களை இயக்க நேற்று மதிய ஷிப்ட்டிற்கு டிரைவர், கண்டக்டர்கள் வரவில்லை.

இதனால், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஷிப்ட் மாற்றப்பட வேண்டிய டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதியம் 3 மணிக்கு மேலும், அனைத்து பஸ்களும் போர்டுகளை கழற்றி வைக்காமல் இருந்ததால், நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். அரசு பஸ்கள் இயங்கப்படாததால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் இயங்காமல் பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது பயணிகள் மத்தியில் ஆத்திரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இது குறித்து கிளைமேலாளர் மாரியப்பன் கூறுகையில், ‘பணியாளர் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார். அந்த துக்கத்தை விசாரிக்க டிரைவர், நடத்துனர்கள் சென்று வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பஸ்களின் இயக்குவதில், சிறிது தாமதம் ஏற்பட்டது’ என்றார்.

Tags : State Bus Terminus ,
× RELATED டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முற்றுகை