×

தினமும் ரூ.1 லட்சத்தை விழுங்கும் அம்மா உணவகங்கள்

மதுரை, நவ. 22:  அரசு மானியம் கைவிரிப்பால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, மதுரை மாநகராட்சி 11 அம்மா உணவகங்களை நடத்த முடியாமல் திணறுகிறது. இதனால் தினமும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ‘அம்மா உணவகம்’ தமிழகம் முழுவதும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிதி மூலம் நடத்தப்படுகிறது. மதுரை மாநகரில் திடீர்நகர், திருப்பரங்குன்றம், புதூர், முனிச்சாலை, சுந்தர்ராஜபுரம், பழங்காநத்தம், மதிச்சியம் உள்ளிட்ட 10 இடங்களில் 2013ம் ஆண்டு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதன் பிறகு 2015ல் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் திறக்கப்பட்டு. மொத்தம் 11 உணவகங்கள் மாநகராட்சி பொறுப்பில் உள்ளன. இங்கு  தினமும் காலையில 300 பேருக்கு தலா 4 இட்லி வீதம் 1,200 இட்லி சாம்பார், (ஒரு இட்லி விலை ரூ.1) மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம் (ரூ.5), தயிர்சாதம் (ரூ.3) வீதம் விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். இதன்படி மூன்று வகை உணவுகளையும் அன்றாடம் சமைத்து விற்பனை செய்வதில்  வரவு கழித்து பார்த்தால் ஒரு உணவகத்தின் பற்றாக்குறை அதாவது நஷ்டம் ரூ.7,419 ஆகிறது. 11 உணவகத்திற்கு அன்றாட மொத்த பற்றாக்குறை ரூ.81 ஆயிரத்து 609 ஆகும். இந்த புள்ளிவிவர கணக்கு 5 ஆண்டுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்தது.

தற்போது காய்கறி, தயிர், எண்ணெய், காஸ் சிலிண்டர் விலை ஏற்றம் மற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களால் செலவு அதிகரித்துள்ளது. உத்தேசமாக நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் விழுங்கி மாநகராட்சி கையை கடிக்கிறது.  இதற்காக மாநகராட்சிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தும்  ஒதுக்காமல் கைவிரித்துவிட்டது. காய்கறி, தயிர். ஊறுகாய் சப்ளை செய்வோருக்கு பணம் வழங்கப்படாமல் பாக்கி ஏறிக்கொண்டே போகிறது. உணவின் தரமும் தேய்ந்து கொண்டே போவதாக சாப்பிடுவோர் புகார் கூறுகின்றனர். மாநகராட்சி பொது நிதியை அம்மா உணவகங்கள் விழுங்கி விடுகின்றன. இதன் காரணமாக மாநகராட்சியில் மக்களின் அடிப்படை தேவை வசதிகளான குடிநீர் குழாய் பராமரிப்பு, குண்டும், குழியுமாக கிடக்கும் ரோடு சீரமைப்பு, தெரு விளக்கு பராமரிப்பு போன்ற பணிகளுக்கு நிதியின்றி சீரழிந்து கிடக்கிறது.வார்டுக்கு ஒன்று வீதம் 100 அம்மா உணவகம் நிறுவப்படும் என்ற மாநகராட்சி அறிவிப்பும் அம்போ ஆனது. 11 உணவகங்களையே நடத்த முடியாமல் மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியுடன் திணறுகிறது.

Tags : Mothers ,
× RELATED கர்ப்பிணி தாய்மார்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள்