×

குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் பவனி ‘அரோகரா’ பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் திரண்டு தரிசனம் திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் உற்சவம் கோலாகலம்

திருவண்ணாமலை, நவ.22: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 8ம் நாளான நேற்று, பெரிய குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அரோகரா பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் பஞ்சரதங்கள் மாட வீதியில் பவனி வந்து நிலையை அடைந்தது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம், நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிலையை அடைந்தது. இந்நிலையில், விழாவின் 8ம் நாள் உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. காலை உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்து, திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் காலை 11.30 மணிக்கு எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி திருவீதியுலாவை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்தனர். இடையிடையே லேசான சாரல் மழை பெய்ததால் இதமான சூழல் காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு 8ம் நாள் இரவு உற்சவம் விமரிசையாக தொடங்கியது. அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டனர். பின்னர். அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனங்களில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வந்தனர். நள்ளிரவு வரை வீதியுலா நடந்தது. லேசான மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது.

8ம் நாள் விழா எதற்காக?

முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடமை, பாசங்களில் இருந்து நீங்குதல், தன்வயத்தனாதல், பேரருள் உடமை, ஆற்றளுடமை, இயற்கை உணர்வுடமை, தூய்மை உடம்புடையனாதல் ஆகிய எட்டு வகையான குணங்களையும் கொண்டவர் இறைவன். இந்த எட்டு குணங்களையும் ஆன்மாக்களுக்கு அருளவே 8ம் நாள் உற்சவம் நடைபெறுவதன் உட்பொருளாகும்

குதிரை வாகனத்தின் சிறப்பு

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு கால்களையும், ஞான காண்டம், கரும காண்டம் எனும் காதுகளையும், பரஞானம், அபரஞானம் எனும் கண்களையும், விதிவிலக்கு எனும் முகத்தையும், ஆகமம் எனும் அணிகலன்களையும், சதங்கை, கிண்கிணி, மாலை, சிலம்பு எனும் மந்திரங்களையும் உள்ளடக்கிய குதிரை வாகனத்தின் மீது, உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் பவனி வந்து, அடியார்களின் பாசக் கயிறுகளை இற்று விழும்படி அருள்பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவில் இன்று

காலை உற்சவம்: மூஷிக வாகனத்தில் விநாயகர், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் பவனி.

இரவு உற்சவம்: மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மன், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் பவனி.

Tags : Annamalaiyar Pavani ,Arukara ,Thiruvannamalai Theepathirigai ,slogan devotees ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...