×

விபத்தில் இழந்த கைகளை வாலிபருக்கு மீண்டும் பொருத்திய ஜிப்மர் மருத்துவ குழு

புதுச்சேரி, நவ. 22:  புதுச்சேரியில் தொழிற்சாலை விபத்தில் 32 வயது இளைஞர் இரு கைகளையும் இழந்து ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி பீகாரை சேர்ந்த 22 வயது இளைஞர் பெங்களூரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது தந்தை காவலாளியாகவும், தாய் கூலித்தொழிலாளியாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இத்தகவல்கள் உறுப்பு தானம் தேவைப்படுவோர் பட்டியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஜிப்மரில் கைகள் தேவைப்படும் விவரம் தெரிய வந்தது. அவர்கள் பீகார் இளைஞரின் கைகளை பெங்களூரிலிருந்து புதுச்சேரி கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18ம் தேதியன்று பீகார் வாலிபரின் கைகள் பிரித்து எடுக்கப்பட்டது. அந்த கைகளுக்கு பதிலாக செயற்கை கைகளை தானம் செய்தோருக்கு அமைத்தனர். பின்னர் இளைஞரின் இரு கைகளும் பாதுகாப்புடன் 18ம் தேதி காலை 11.30 மணிக்கு பெங்களூரில் இருந்து சாலை வழியாக ஆம்புலன்ஸில் புதுச்சேரிக்கு புறப்பட்டது.

சுமார் 307 கிமீ தொலைவுள்ள புதுச்சேரிக்கு வரும் விவரங்கள் பெங்களூர், தமிழகம், புதுச்சேரி போக்குவரத்து போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. மாலை 4.30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மருக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. புதுச்சேரி ஜிப்மரில் ஐசியூ தயாராக இருந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை 5 மணிக்கு வாலிபருக்கு கைகளை பொருத்தும் அறுவை சிகிச்சை தொடங்கியது. தொடர்ச்சியாக 9 மணி நேரம் 30 நிமிடங்கள் நடந்த அறுவை சிகிச்சை அதிகாலையில் நிறைவடைந்தது. மொத்தம் 8 யூனிட் ரத்தம் இந்த அறுவை சிகிச்சையில் தேவைப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இரு கைகளும் பொருந்தியுள்ளதையும் அதன் செயல்பாட்டையும் தொடர் ஆய்வில் ஜிப்மர் தரப்பில் கண்காணித்து வருகின்றனர். இது ஜிப்மரில் நடந்த 2வது மேல் கை பொருத்தும் அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jipmer Medical Group ,accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...