×

கஜா புயல் நிவாரண பொருட்கள் பெற தனி நபருக்கு அனுமதி வழங்கவில்லை

ெபரம்பலூர்,நவ.21: கஜா புயல் நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கப்படவில்லை என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரும் பங்காற்றிட வேண்டுகிறேன். அவர்களுக்கு உதவிட தாங்கள் தங்களால் இயன்றவரை பொருட்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக தாசில்தாரிடம் ஒப்படைக்க  வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நமது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த 19ம்தேதியன்று முதற்கட்டமாக ரூ2.45லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை தஞ்சை மாவட்டத்திற்கும், நேற்று 2ம்கட்டமாக ரூ1.80லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருவாரூர் மாவட்டத்திற்கும், 3ம்கட்டமாக ரூ3.60லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் என இதுவரை ரூ7.85லட்சம் மதிப்பில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே அதுபோன்று அணுகுவோரை தவிர்த்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு வேட்டி, சேலை, நைட்டி, துண்டு மற்றும் ஆண், பெண், குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான துணி வகைகள், அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி வகைகள், டீ, காபி, மசாலா பொருட்கள், சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய், மெழுகுவர்த்தி, கோரைப்பாய், ரவை, கோதுமை, மைதா, சேமியா, டார்ச், பேட்டரிகள், தீப்பெட்டி, வாளிகள், குவளைகள், பற்பசை, டூத் பிரஸ், மருந்து வகைகள், பால் பவுடர், ஸ்டவ் அடுப்பு போன்ற நிவாரண பொருட்களை வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயன்படுத்திய பழைய பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  மேலும் கூடுதல் தகவல்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் பேரிடர்மேலாண்மைத் துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 04328-224455 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ghazi ,storm ,individual ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...