×

ஓஎம்ஆர் - இசிஆர் சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட வேண்டும்

திருப்போரூர், நவ. 21: ஓஎம்ஆர் - இசிஆர் சாலையை இணைக்கும் வகையில், முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட வேண்டும், என பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினர். சென்னைக்கு அருகே வளர்ந்து வரும் புறநகர் பகுதியான முட்டுக்காடு ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். முட்டுக்காடு ஊராட்சி பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை என இரண்டு முக்கிய சாலைகளிலும் உள்ளது.
இவ்வூராட்சியில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர் ஆகிய கிராமங்களும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் போன்ற கிராமங்களும் உள்ளன.  முட்டுக்காடு ஊராட்சி அலுவலகம், விஏஓ அலுவலகம் போன்றவை ஓஎம்ஆர் சாலையில் உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கோவளம், கேளம்பாக்கம் வழியாக சுற்றிக்கொண்டு வர வேண்டும்.

அல்லது இப்பகுதி மக்கள் அக்கரை, சோழிங்கநல்லூர், நாவலூர் வழியாக 20 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டும்.  ஒரே ஊராட்சியில் உள்ள இரு வேறு பகுதிகளுக்கு செல்ல வழி இல்லாததால் முட்டுக்காடு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் இடையே பாலம் அமைக்க வேண்டுமென முட்டுக்காடு ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தினேஷ்குமார் தலைமையில் முட்டுக்காடு கிராம பொதுமக்கள் மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் கலந்து பேசி இக்கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இரண்டாக பிரிக்கப்படுமா?
முட்டுக்காடு ஊராட்சியின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும், இரு வேறு பிரதான சாலைகளில் ஊராட்சி அமைந்துள்ளதாலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கிராமம், கரிக்காட்டுக்குப்பம், கல்விமா நகர், மஞ்சள் போர்டு ஆகிய பகுதியை தனி ஊராட்சியாகவும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஏகாட்டூர், கழிப்பட்டூர், வாணியஞ்சாவடி பகுதிகளை தனி ஊராட்சியாகவும் பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : OMR ,bridge ,area ,Muttukadu ,ECR ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!