×

ஆதிதிராவிடர் நலச்சட்டப்படி ஆர்ஜித நிலத்தை வேறு பிரிவினருக்கு வழங்கக்கூடாது கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, நவ. 21:  ஆதிதிராவிடர் நலச் சட்டப்படி ஆர்ஜிதமான நிலத்தை வேறு பிரிவினருக்கு வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள ஐகோர்ட் கிளை, இது தொடர்பாக கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் ஆட்டுகுளத்தை சேர்ந்த நாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நிலமற்ற ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு நிலம் வழங்குவதற்காக ஆட்டுக்குளத்தில் 9.50 ஏக்கர் நிலம் ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்டது. வருவாய் ஆவணங்களில் ஆதிதிராவிடர்களுக்கான நத்தமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு பலருக்கு 3 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஆதிதிராவிடர்கள் அல்லாத பலருக்கும் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஒருசில குடும்பத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தை பெற்றுள்ளனர். ஏற்கெனவே வீடு உள்ளவர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆதிராவிடர் நலச்சட்டத்திற்கு எதிரானது. தவறாக ஒதுக்கீடு பெற்றவர்களின் பல இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிலமற்ற ஆதிதிரவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யக்ேகாரினாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்குள்ள காலி நிலங்களை ஆதிதிராவிடர் அல்லாதோருக்கும், தனி நபர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது நிலங்களை அளவீடு செய்யும் பணி நடக்கிறது.

எனவே, ஆட்டுக்குளத்தில் ஆதிதிராவிடர் நலச்சட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்யப் பட்ட நிலத்தை ஆதிதிராவிடர் அல்லாதோருக்கும், தனிநபர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய தடைவிதிக்க வேண்டும். காலியிடங்களை நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் ஆதிதிராவிடர் நலச்சட்டப்படி ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை ஆதிதிராவிடர் அல்லாத வேறு பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது. ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டோர், ஒதுக்கீடு பெற்ற ஆதிதிராவிடர் அல்லாத பிறர் குறித்த விபரங்களை அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ.26க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Collector ,land ,rebider ,
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி...