×

வத்தலக்குண்டுவில் மை ஊற்றிய வாக்கு பெட்டிகள் ஆய்வுக்கு கோவை சென்றன

வத்தலக்குண்டு, நவ. 21:  வத்தலக்குண்டு கூட்டுறவு வங்கி தேர்தலில் மை ஊற்றப்பட்ட வாக்கு பெட்டிகள் ஆய்வுக்காக கோவைக்கு எடுத்து செல்லப்பட்டன. அதிமுகவினர் கடத்தல் முயற்சி தகவலலால் வங்கி முன்பு திமுகவினர், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடந்தது. இதில் திமுகவினர் 11 பேர், அதிமுகவினர் 11 பேர், அமமுகவினர் 11 பேர் மற்றும் சுயேட்சையாக 8 பேர் உள்பட மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர்.  தேர்தலில் மொத்த வாக்கான 9,677ல் 2169 வாககுகள் பதிவானது. தொடர்ந்து நவ.3ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. மாலை 3 மணி வரை திமுக வேட்பாளர்கள் 11 பேரும் முன்னிலை வகித்து வந்தனர். அப்போது அதிமுக பிரமுகர் ஜெயபாண்டி திடீரென வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்து வாக்கு பெட்டிக்குள் மையை ஊற்றினார். இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 6 வாக்கு பெட்டிகளில் வாக்குகளை போட்டு சீல் வைத்து வங்கியிலேயே வைத்திருந்தனர். இதற்கிடையே வாக்குகளை உடனடியாக எண்ணி தேர்தல் முடிவினை அறிவிக்க வேண்டும் என திமுக மாவட்ட பிரதிநிதி கணேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதிமுக தரப்பில் தேர்தலை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை ஆணையம் அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பான மேற்கு மண்டல குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அக்குழுவினர் வாக்கு பெட்டிகளை ஆய்வு செய்வதற்கு எடுத்து செல்ல வத்தலக்குண்டுவிற்கு நேற்று வந்தனர்.
அப்போது வாக்கு பெட்டிகளை கடத்தி செல்ல அதிமுகவினர் முயற்சி செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட திமுகவினர் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமரன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்போடு வங்கியில் இருந்து 6 வாக்கு பெட்டிகளையும் காரில் ஏற்றி கோயம்புத்தூருக்கு புறப்பட்டனர்.

இடையில் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவினர் அக்காரின் பின்னே 2 கார்களில் கோயம்புத்தூர் வரை தொடர்ந்து சென்றனர்.
இதுகுறித்து ஐபி.செந்தில்குமார் கூறுகையில், ‘‘அதிமுகவினர் தோல்வி பயத்தில் ஜனநாயக முறைப்படி நடந்த கூட்டுறவு தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். அதனை சட்டரீதியாகவும், பொதுமக்கள் துணையுடனும் முறியடிப்போம்’’ என்றார்.

Tags : polling booths ,
× RELATED மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு