×

கெங்கவல்லி அருகே பாலீஸ் போடுவதாக கூறி நகை பறிக்க முயன்ற பீகார் வாலிபர் சிக்கினார் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

கெங்கவல்லி, நவ.21:  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி நீடுவீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி நளினி. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வரும் வெங்கடேசன், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து, குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் நளினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டுக்கதவை தட்டும் சத்தம்கேட்டு நளினி சென்று திறந்தபோது, அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர், வீட்டில் பழைய நகைகள் இருந்தால் கொடுங்கள். பாலீஸ் போட்டுத் தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி நளினியும், சில கவரிங் நகைகளை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.


அதனை வாங்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டதும் புகை வந்துள்ளது. இதனால், நளினிக்கு மயக்கம் வருவதுபோல் இருந்துள்ளது. உடனே, அவர் அணிந்திருந்த நகைளை மர்ம ஆசாமி பறித்துள்ளான். இதனால், உஷார் அடைந்த நளினி வீட்டின் கதவை இழுத்து சாத்திக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் ராம் மகன் பீமன்(24) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் வந்ததாகவும், மற்றொருவன் தப்பி சென்று விட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Bihar ,Kangavalli ,
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...