×

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி நிவாரணம் எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ. 20: கோட்டூர் ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக எம்எல்ஏ ஆட லரசன் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறி மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியத்தில் கஜா புயலால் மிகவும் பாதிப்படைந்த குறிச்சி மூலை, மருதாவனம், திருக்களர், கருப்புகிளார், விக்கிரவாண்டியம், கோட்டூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளுக்கு  திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன், கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலஞானி ஆகியோர்  நேரில் சென்று பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
 
இதுகுறித்து எம்எல்ஏ ஆடலரசன் கூறுகையில்,  புயலால் வீடுகள் இழந்து நிர்கதியாய் நிற்கும் மக்கள் தங்கியுள்ள பேரிடர் முகாம்களை மாவட்ட நிர்வாகம்  அவசர அவசரமாக மூட முயற்சிப்பதை கைவிட வேண்டும். இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையில் பேரிடர் முகாம்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். முகாம்களில் மின் வசதி, சுகாதாரமான குடிநீர், மருத்துவ வசதிகள்  வழங்க வேண்டும். தொகுதி முழுவதும் உள்ள முகாம்களில் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தடையற்ற மின்வசதி, சுகாதாரமான குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும். கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் அமைத்து நோய்த்தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட வேண்டும். தொகுதி முழுவதும் சேதமடைந்த வீடுகள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், கால்நடைகள் குறித்து முழுமையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

Tags : Relief MLA Abdullah ,victims ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்