×

தரங்கம்பாடி பகுதியில் 500 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் பூச்சி நோயால் பாதிப்பு மானிய விலையில் பூச்சி மருந்து வழங்க விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி,நவ.20: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட சம்பா சாகுபடி பயிர்கள் பூச்சிநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே வேளாண்துறை மானிய விலையில் பூச்சி மருந்துகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கொடவிளாகம், கோவஞ்சேரி, நரங்சிகநத்தம், பில்லாவிடந்தை, கலசம்பாடி, அரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சம்பா தாளடி பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இளபயிராக உள்ள அந்த பயிர்களில் இலைபேன் மற்றும் சாறுஉறிஞ்சும் பூச்சிகள் அதிகளவில் இருப்பதால் இளம் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் மழையினால் துளிர்த்து வரும் இளம்பயிர்களின் இலைகளில் கீறல் ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பயிர்களை காப்பாற்ற வேளாண்துறை பூச்சு மருந்துகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஈச்சங்குடி விவசாய நல சங்க தலைவர் துரைராஜ் கூறியதாவது, திருவிளையாட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா தாளடி பயிர்களை பூச்சுகள் தாக்கி வருகின்றனர். இலைபேன் மற்றும் சாறுஉறிஞ்சு பூச்சிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற உடனடியாக பூச்சி மருந்து அடிக்க வேண்டும். இதற்கான பூச்சி மருந்துகள் வாங்க ஏக்கருக்கு 500 ரூபாய் செலவாகும். இப்போது உள்ள சூழ்நிலை விவசாயிகளுக்கு இதில் பெரிய சுமையாக இருக்கும். எனவே வேளாண்துறை 75 சதவீத மான்யவிலையில் பூச்சி மருந்துகளை வழங்கி இளபயிர்களை காப்பாற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : land ,area ,Tharangambadi ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!