×

திருவண்ணாமலையில் நாளை தீபத்திருவிழா மகா தேரோட்டம் * 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு * பஞ்சரதங்களின் பவனி காண பக்தர்கள் ஆர்வம்

திருவண்ணாமலை, நவ.19: கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இதனால், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6ம் நாளான இன்று(திங்கட்கிழமை) இரவு வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, விழாவின் 7ம் நாளான நாளை (20ம் தேதி) மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடைபெற உள்ளது. அதையொட்டி, வேதமந்திரங்கள் முழங்க பஞ்சரதங்களில் கலசங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

மேலும், ஐந்து தேர்களின் உறுதித் தன்மையும் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு பொதுப்பணித்துறையால் உறுதித் தன்மை சான்று வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேரோடும் மாட வீதியில் சாலை சீரமைப்பு, ஆக்கிமிப்புகள் அகற்றம், மின் ஒயர்கள் குறுக்கீடு அகற்றம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு, தேரோட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், நாளை (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலாவதாக விநாயகர் தேர் புறப்பாடு நடைபெறும். பின்னர், சுப்பிரமணியர் தேர் மாட வீதியில் பவனி வரும். அதைத்தொடர்ந்து, பகல் 1 மணி அளவில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ புறப்பாடு நடைபெறும்.

மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும். இரவு நேரத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அரசின் தடை உள்ளது. எனவே, பஞ்ச ரதங்களின் பவனியை இரவு 9 மணிக்குள் நிலையை அடையும் வகையில் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், தேர் திருவிழாவின்போது மழைக்கான வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தேரோட்டத்தின்போது, பாதுகாப்புக்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினருடன் கூடிய நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை மகா ரதத்தை பின்தொடர்ந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர் சக்கரங்களுக்கு கட்டைப்போடும் சேவைப்பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்க உள்ளனர். தீபத்திருவிழாவில் பஞ்ச ரதங்கள் மாட வீதியில் பவனி வரும் சிறப்பு மிக்க தேர் திருவிழாவை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை வர தொடங்கியுள்ளனர். எனவே, பாதுகாப்பு பணியில், எஸ்பி சிபிசக்ரவர்த்தி தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். அம்மன் தேரோட்ட பாதுகாப்பு பணியில், 200 பெண் போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும், கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு போன்றவற்றை கண்காணிக்க 82 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 3 இடங்களில் சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Tags : Tiruvannamalai ,Deepathirivigala Maha Therottam ,Devotees ,
× RELATED ராஜவாய்க்காலில் போலீஸ் பாதுகாப்பு