×

கிழக்கு கடற்கரை சாலையில் பேரிடர் பாதுகாப்பு பணி: ஆணையர் அமுதா, கலெக்டர் பொன்னையா ஆய்வு

மாமல்லபுரம், நவ.16: கஜா புயல் தாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிரொலிக்கலாம் என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த ஆய்வு நடைபெற்றது. பேரிடர் மீட்பு முன்னேற்பாட்டு பணியை ஆணையர் அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நெம்மேலி, பட்டிபுலம், கோவளம், சாலவான்குப்பம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள், பேரிடர் மீட்பு மையங்கள் ஆகியவற்றினை  பார்வையிட்டனர். பொதுமக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், ஜெனரேட்டர், டீசல், டார்ச் லைட், ரொட்டி, பால் போன்றவை வாங்கி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து பேரிடர் மீட்பு ஆணையர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடற்கரையோர மீனவ கிராமங்களில் கஜா புயல் கரையை கடக்கும்போது பலத்த வேகத்துடன் காற்று வீசும் அபாயம் உள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் கண்காணித்து சரி செய்ய அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்ட 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கம்பங்கள், மரங்கள் விழுந்தவுடன் அவற்றை அகற்றவும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குரிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் வரதராஜன், திருப்போரூர் வட்டாட்சியர் ராஜ்குமார், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, பிரகாஷ் பாபு, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, பரிமளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.   மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை புயல் எச்சரிக்கையையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிபுலம், தேவனேரி, புது எடையூர் குப்பம், புது நெம்மேலி குப்பம், மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அனைத்து படகுகளும் கரைகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. 

Tags : Amudha ,East Coast Road ,Collector Ponniah ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை...