×

ஆதிதிராவிட விடுதி ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் மீண்டும் பணி வழங்கும்வரை தொடரும் என அறிவிப்பு

விருதுநகர், நவ.16: மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆதிதிராவிட நல விடுதி ஊழியர்கள் 46 பேர் 2வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட விடுதிகளில் காலியாக இருந்த 57 சமையாளர், 36 துப்புரவு பணியாளர்  என 93 காலியிடங்கள் கடந்த 2015-16ல் நிரப்பப்பட்டன. இவற்றில் அருப்புக்கோட்டை தாலுகாவில் 21 சமையலர் மற்றும் 8 துப்புரவாளர்கள், விருதுநகர் தாலுகாவில் 8 சமையலர் மற்றும் 2 துப்புரவாளர்கள், ராஜபாளையம் தாலுகாவில் 7 சமையலர் என 46 பணியிடங்கள் முறையற்றவையாக கூறப்படுகிறது. இவற்றில் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 3 பேருக்கு ஆக.17 முதல் ஊதியம் நிறுத்தப்பட்டது. விருதுநகர் ஒன்றியத்தில் 5 பேருக்கு ஜன.18 முதல் ஊதியம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 46 பேரையும் பணியாற்ற அனுமதிக்காத வகையில் விடுதி வருகை பதிவில் நவ.12 முதல் கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது என விடுதி காப்பாளருக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் 46 பணியாளர்களும் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கலெக்டர் அலுவலகத்திற்குள் நடந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நவ.13 முதல் வேலைக்கு செல்லலாம் என ஏமாற்றி வெளியேற்றினர். நவ.13ல் வேலைக்கு சென்றவர்களை பல விடுதிகளில் கையெழுத்து போட அனுமதிக்கவில்லை. வாய்மொழி உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என கடிதம் அளித்த விடுதி காப்பாளர் சங்கத்தினரும் துறைவாரியாக மிரட்டப்பட்டனர்.  இதை தொடர்ந்து நவ.14ம் தேதி முதல் கலெக்டர் அலுவலக நுழைவு பகுதியில் குழந்தைகளுடன் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொளுத்தும் வெயில், பனியில் குழந்தைகளுடன் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். மாநில அமைப்பாளர் சுந்தர்ராஜன் கூறுகையில், ‘‘2 வது நாளாக இரவு, பகலாக காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. நிரந்தர தீர்வு  கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

Tags : waiter ,term ,Adi Dravidaam ,
× RELATED 1 முதல் 5ம் வகுப்பு வரை ‘எமிஸ்’...