×

குண்டும் குழியுமாக காணப்படுகிறது குறுக்கை ஒடிக்கும் ஒக்கூர் கிராமச்சாலை 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை

சிவகங்கை, நவ.16:  சிவகங்கை அருகே ஒக்கூரில் இருந்து அண்ணநகர் வழி இடையமேலூர் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாய் உள்ளது. சிவகங்கை அருகே ஒக்கூர்புதூர் ஊராட்சிக்குட்பட்டது அண்ணாநகர் ஏ, அண்ணாநகர் சி பகுதிகள். ஒக்கூர் சாலையில் இருந்து பிரிந்து அண்ணாநகர் வழியாக இடையமேலூர் செல்லும் இணைப்புச்சாலை உள்ளது. சாலூர், இடையமேலூர், நாலுகோட்டை, கீழப்பூங்குடி, பேரணிப்பட்டி, திருநாராயணபுரம், சாலூர், இந்திராநகர், செம்பரியான்பட்டணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இச்சாலை வழியே தான் காய்கறிகளை வியாபாரிகள் ஏற்றி செல்கின்றனர். கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் இந்த சாலையே பிரதான வழியாகும். சுமார் 2.5 கி.மீ செல்லும் இச்சாலை கடந்த 10 ஆண்டிற்கு முன் போடப்பட்டது. அதன் பிறகு எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை.

இதனால் கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தார்ச்சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் டூவீலர்கள் விபத்தில் சிக்குவது, வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமத்தினர் கூறுகையில், சாலை குண்டும், குழியுமாய் இருப்பதால் 2.5 கி.மீ தூரத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. வாகனங்களை ஓட்ட முடியவில்லை. ஆட்டோ, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் சாலையை காரணம் காட்டி அவசரத்திறகு வர மறுக்கின்றனர். சாலை குறித்து மாவட்ட அமைச்சர், எம்.பி, கலெக்டர் என தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து சாலை போடாமல் புறக்கணித்தார்கள் எனில் கிராமத்தினர் திரண்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

Tags : village ,crossroads ,Okkur Vallakai ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...