×

தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

தரங்கம்பாடி, நவ.15:  2017 ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தரங்கம்பாடி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஈச்சங்குடி விவசாய சங்கத்தலைவர் துரைராஜ் பேசும்போது, 2017ம் ஆண்டு ராபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. உடனடியாக விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகையை வழங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 12 விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களில் 3ல் மட்டுமே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் பெறப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கி உள்ளனர். இதே போல் அனைத்தும் விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களும் விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் பெறப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

எனவே விவசாயிகளுக்கு உதவுகின்ற வகையில் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களும் இந்த பணியை செய்ய வேண்டும் என்று கூறினார்.  விவசாயிகள் ஆறுபாதி குருசாமி, காழியப்பநல்லூர் அருள்தாஸ், தில்லையாடி வேதநாயகம், உக்கடை கணேசன், கிடாரங்கொண்டான் முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : office ,Tharangambadi Taluk ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...