×

கஜா புயல் எச்சரிக்கை எதிரொலி கடலூர் மீனவ கிராமங்களில் முதன்மை செயலர், கலெக்டர் ஆய்வு

கடலூர், நவ. 15: கஜா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து மீனவர் கிராமங்களிலும், வீராணம் உள்ளிட்ட முக்கிய நீர்நிலை பகுதிகளில் தமிழக அரசின் முதன்மை செயலரும், வேளாண்மைத்துறை ஆணையருமான ககன்தீப்சிங் பேடி மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுடன் ஆய்வு நடத்தினார். இதில் மழை மற்றும் புயல் நேரங்களில் ஆபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டது.
கஜா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு கடலூர் நகரம் மற்றும் தாழங்குடா, தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம், ராசாப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர், முடசல் ஓடை ஆகிய கடற்கரை கிராமங்களை தமிழக அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது புயல் பாதுகாப்பு மையங்கள், அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கிறதா? என்பது குறித்தும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மக்களிடம் புயல் நேரத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று கேட்டறிந்தார்.

சிதம்பரத்தில் நேற்று பிற்பகல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதன்மை செயலர் பின்னர் சிட்டுக்காட்டூர், வேளாளக்குடி, அகரநல்லூர், அத்திப்பட்டு, திருநாரையூர் மற்றும் வீராணம் ஏரி உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆட்சியர் அன்புச்செல்வன் உள்பட அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் தங்கக்கூடிய 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 8400 பேர் தங்கும் வகையில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 1 லட்சத்து 54 ஆயிரம் பேர் தங்கக்கூடிய 191 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு பணிகளில் 2600 பேர்:  கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எஸ்.பி சரவணன், ஏ.டி.எஸ்.பி வேதரத்தினம் மற்றும் டி.எஸ்.பி க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் டி.ஜ.ஜி சந்தோஷ்குமார் கூறுகையில், கடலூர் மாவட்டம் 56 கி.மீ கடற்கரையையும் அதனையொட்டி 44 மீனவர் கிராமங்களையும் கொண்டது. கஜா புயல் மீட்பு மற்றும் பாதுகாப்புக்குரிய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

சிறப்பு பயிற்சி பெற்ற பேரிடர் மீட்பு காவல்படை வீரர்கள் 114 பேர் புயல் பாதிக்கக்கூடிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். ராணுவத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் 78 பேர் மூன்று குழுக்களாக வந்துள்ளனர். மேலும் தமிழக பேரிடர் மீட்பு கமாண்டோ வீரர்கள் 37 பேரும் வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புக்குரிய 274 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த காவல்நிலையங்களும் அவரவர் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வர். காவல்துறை, ஊர்காவல் படை உள்பட 2600 பேர் பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பணிகளை மேற்கொள்ள எஸ்.பி சரவணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி வேதரத்தினம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள காவல்துறை 300 வாக்கி டாக்கிகள், தேவையான வாகனங்கள், படகுகள், பைனாகுலர்கள், டார்ச் லைட்டுகள், லைப் ஜாக்கெட்டுகள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுடன் தயார் நிலையில் உள்ளது. உடனுக்குடன் தகவல் தொடர்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து காவல்துறை மீட்பு பணிகளை மேற்கொள்ளும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இரண்டு காவல்துறையினரும் பணியில் இருப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Principal Secretary ,Echo Cuddalore ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...