×

கோவையில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில் குழந்தை விஞ்ஞானி விருது பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஜெயங்கொண்டம், நவ. 14:  கோவையில் மாநில அளவில் தேசிய அறிவியல் குழந்தைகள் 26வது மாநாடு நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவில் 6 மாணவர்கள் மாநில அளவில் சாதனை புரிந்து குழந்தை விஞ்ஞானி
விருது பெற்றனர். கழிவில் இருந்து செல்வம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மான்ஸ்ரீ, சுப்ரியா, சமூக மக்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அகமது இப்ராஹிம், ரேணுகாதேவி, சுற்றுச்சூழலை புதுப்பித்தல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சந்தோஷ்குமார், சந்தோஷ் ஆகியோர் குழந்தை விஞ்ஞானி விருது பெற்றனர்.

இதைதொடர்ந்து ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் குழந்தை விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் தாரணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் வைத்திலிங்கம், ஸ்டாலின், வழிகாட்டி ஆசிரியர்கள் பெனாசீர் மேகலா முன்னிலை வகித்தனர். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்- வழிகாட்டி ஆசிரியர் செங்குட்டுவன், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்- வழிகாட்டி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தர்மராஜன் நன்றி கூறினார்.


Tags : PG Scientist ,National Science Conference ,Coimbatore ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!