×

கம்பம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு டெங்கு பரவி வருவதால் நடவடிக்கை

கம்பம், நவ.14: கம்பம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான காய்ச்சல் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஆய்வு செய்தார். கம்பம் அரசு மருத்துவமனைக்கு கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண்சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்பட 35க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனிபிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் கட்டில்களில் கொசு வலை அமைக்கப்பட்டு நோயாளிகள் தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தின் பெரும் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் உருவாகியுள்ளது. இதனால் தற்போது கம்பம் அரசு மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநோயாளிகள் பிரிவில் மற்ற நோயாளிகளுடன் காய்ச்சல் நோயாளிகளும் கலந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை தடுக்கும் பொருட்டு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை முடித்து அங்கேயே ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்காலிக காய்ச்சல் பிரிவை நேற்று மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சரஸ்வதி ஆய்வு மேற்க்கொண்டார். தொடர்ந்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடமும், குழந்தைகள் பிரிவிலும் உள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மருத்துவ அலுவலர் பொன்னரசன் மற்றும் டாக்டர்களோடு ஆலோசனை நடத்தினார்.

Tags : Pampa Government Hospital ,
× RELATED தேனி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களை சீரமைக்க பயணிகள் கோரிக்கை