சிவாஜி நகரில் குடிநீர் குழாயை சுற்றி கழிவுநீர் தேக்கம்

தேனி, நவ.14: தேனியில் சிவாஜி நகர் பகுதியில் குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. தேனி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவது அதிகரித்து வருகிறது. இவர்களில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோயால் இறப்பவர்கள் குறித்து அரசு அறிக்கை வெளியிடாமல் மூடிமறைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறை அலட்சியத்தால் பல இடங்களில் குப்பைகள் குவிந்தும், சாக்கடை நீர் தேங்கியும் உள்ளது.  இதனால் கடந்த வாரம் அல்லிநகரம் கம்பர் தெருவை சேர்ந்த திம்முத்தாய் என்ற மாற்றுத்திறனாளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இருந்தபோதிலும் நகராட்சியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறை சுணக்கத்துடனேயே நடந்து வருகிறது.

தேனி நகராட்சியில் கே.ஆர்.ஆர் நகரில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு செல்வதற்கான திட்டச்சாலையில் சிவாஜி நகர் இணையும் பகுதியில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள சாக்கடை நீருக்கு மத்தியில் குடிநீர் குழாய் லீக்கேஜ் பைப் உள்ளது. யானைக்குழாய் எனப்படும் இந்த பைப்பில் எப்போதும் குடிநீர் வருகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் சாக்கடைக்குள் இறங்கி தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.

சுகாதாரக் கேடு மிகுந்த பகுதியில் சாக்கடை நீர் தேங்கியுள்ள நிலையில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அப்புறப்படுத்தி குடிநீர் குழாயை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தியும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்டநிர்வாகம் சுகாதாரம் கருதி இப்பகுதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவாஜி நகர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>