×

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம், நவ.14: திண்டுக்கல்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைபாதை அமைந்துள்ளது. தமிழகம்-  கர்நாடக  மாநிலத்தை இணைக்கும் இச்சாலை வழியாக 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து உப்பு பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக நேற்று மாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.

9 வது கொண்டை ஊசி வளைவில்  திரும்பும்போது லாரியின் முன்சக்கர அச்சுமுறிந்து நகரமுடியாமல் நின்றது. இதன்காரணமாக மற்ற வாகனங்கள் செல்லமுடியால் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் இரவு 7 மணியளவில் லாரியை நகர்த்தி நிறுத்தினர். இதன்பின் பஸ் உள்ளிட்ட 6 சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. 10 மற்றும் 14 சக்கர லாரிகள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக நேற்று 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thimphu ,
× RELATED பூட்டான் நாட்டில் நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி