×

இ-சேவை, ஆதார் மைய ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு தீபாவளி போனசும் நிறுத்தம் தமிழகம் முழுவதும்

வேலூர், நவ.14:  தமிழகம் முழுவதும் இ-சேவை, ஆதார் மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான தீபாவளி போனசும் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு வருமானச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான சான்று, கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்று ஆகியவற்றுக்கும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் போன்ற சமூக நலத்திட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இ-சேவை மையங்களை தனிநபர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் முடிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பணியாற்ற 10, 12ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்க்ள தேர்வு செய்யப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றி வந்தனர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இ-சேவை மையங்களில், 2500 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தை தற்போது நடத்தி வருவது பெரி என்ற அமெரிக்க தனியார் நிறுவனமாகும். இ-சேவை மையங்களுக்காகவே மாவட்ட அளவில் ஒரு தனி தாசில்தாரும் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் ஒரு உதவி மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அளவில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கீழ் தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. பெரி நிறுவனம் துவக்கத்தில் ₹8 ஆயிரம் மாதம் சம்பளமாக வழங்கியது. ஆரம்பத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. தீபாவளி போனஸாக ₹2 ஆயிரமும் வழங்கி வந்தது. ஆனால் இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பெரி நிறுவனத்திடமிருந்து இ-சேவை மையங்களை நடத்தும் உரிமையை டி அண்ட் எம் சர்வீஸ் கன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. இ சேவை மையங்களை கையில் எடுத்த டி அண்ட் எம் கன்சல்டன்சி நிறுவனம் இ சேவை மைய ஊழியர்களின் சம்பளத்தை ₹8 ஆயிரத்தில் இருந்து ₹6 ஆயிரமாக குறைத்தது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இ-சேவை மைய ஊழியர்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக இசேவை மற்றும் ஆதார் ேசவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் ₹1,500 முதல் ₹5 ஆயிரம் வரை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் ₹2 ஆயிரமும் வழங்கவில்லை.

மேலும் மாதத்திற்கு ஒரு நாளுக்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடிப்பு, நாளொன்றுக்கு இ-சேவை மைய பணியாளர் தங்கள் வருகைப்பதிவை உறுதி செய்ய தினமும் 5 முறை பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவு என்ற நடைமுறை என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சர்வர் தடை, மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட நேரங்களில் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யவில்லை என்றாலும் சம்பளம் குறைக்கப்படுகிறது’ என்று வேதனை தெரிவித்தனர்.

Tags : salar hike ,Diwali ,Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...