×

மார்த்தாண்டம் பாலம் தொடர்பாக தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் எச்சரிக்கை

நாகர்கோவில், நவ.14: தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் தனசேகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மார்த்தாண்டத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால், 220 கோடி செலவில், 2.625 கி.மீ நீளத்தில், மொத்தம் 109 கண்களாக (ஸ்பேன்ஸ்) அதிநவீன தொழில்நுட்பத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, டிசம்பர் 2018-குள் பணி நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பாலமானது, பல்வேறு இயக்கத்திற்கு ஏற்றவகையில் இந்திய சாலை குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட, நவீன தொழில் நுட்பமான, கோள வடிவ தாங்கும் உருளைகள் என்ற நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. இம்முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது, பல்வேறு இயக்கத்திற்கு ஏற்ற வகையில் 3 வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரும்பு பாலங்களின் விலகு தன்மை என்பது, கான்கிரிட் முறையில் கட்டப்படும் பாலங்களை விட சற்று கூடுதலாக இருக்கும். இப்பாலத்தின் அதிகபட்ச விலகு தன்மை 30 மி.மீ அளவிற்குள் இருக்கலாம் என, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பேராசிரியர் தலைமையிலான வல்லுநர் குழுவினர்  மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆனால், உயர்மட்ட பாலத்தின் விலகுதன்மையானது அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாக 17 மி.மீ மட்டுமே உள்ளது. மேலும், இப்பாலத்தின் மீட்சித்தன்மை 95 சதவீதமாகவும், நிகர விலகுதன்மை 1 மி.மீ மட்டுமே உள்ளது. குறிப்பாக, இப்பாலத்தின் கட்டுமான பணி துவங்கிய நாள் முதல் இதுவரை ஒவ்வொரு நிலையிலும், ஐஐடி பேராசிரியர் தலைமையிலான வல்லுநர் குழு மூலம் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டு, பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் தரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐஐடி பேராசிரியர் வல்லுநர் குழுவினர் 12.11.2018 அன்று, இப்பாலத்தின் மாறும் மற்றும் நிலையான தன்மைகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் உள்ளதென தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற இரும்பு பாலங்களில் காணப்படும் விலகுத்தன்மை மற்றும் மீட்சித்தன்மை ஆகியவை தவறாக புரிந்து கொள்ளப்படுவதுடன், இதுகுறித்து அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, உண்மைக்கு புறம்பாக வெளிவரும் வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், உயர்மட்ட பாலம் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.  உயர்மட்ட பாலத்தின் தன்மை குறித்து, தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அல்லது பரப்புவதும் சட்டப்படி தண்டனைக்குரியதாகும். மேலும், இதுகுறித்து தவறான செய்திகளை வெளியிடுவோர் மற்றும் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : National Highway Engineer ,Spreading Bad Information ,Marthandam Bridge ,
× RELATED மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்