×

குமரி மாவட்டத்தில் 16 கோடியில் தென்னை பூங்கா கருத்தரங்கில் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

நாகர்கோவில், நவ. 14: குமரியில் 16 கோடியில் தென்னை பூங்கா அமைக்கப்படும் என நாகர்கோவிலில் நேற்று நடந்த மாநில அளவிலான தென்னை மேம்பாட்டு கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் மாநில அளவிலான தென்னை மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் கொச்சி தென்னை வளர்ச்சி தலைமை அதிகாரி சாரதிந்துதாஸ் வரவேற்றார்.  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த கருத்தரங்கில் சொல்லிக்கொடுப்பதை விவசாயிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் பனை, தென்னையில் இருந்து பதநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என எடுத்து நாம் பயன்படுத்தி வந்தோம். தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொழுப்பு என கூறி கடந்த 35 வருடத்துக்கு முன் தேங்காயை பயன்டுத்தவிடாமல் ஏமாற்றப்பட்டோம். இதனால் நமது வளர்ச்சி தடுக்கப்பட்டது. ஏமாற்றப்படுகிறோம் என்பதை நாம் உணரவில்லை. இந்நிலையில் பனை மரங்களை வெட்டி அழித்து விட்டோம். தற்போது தேங்காய் எண்ணெயில் கொழுப்பு இல்லை என கூறிவருகின்றனர். தென்னையில் கிடைக்கும் தேங்காயை நேரடி விற்பனை செய்வதோடு நின்றுவிடாமல், தென்னையில் இருந்து மதிப்பு கூட்டுபொருட்கள் தயாரிக்க முன்வரவேண்டும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்க தயாராக உள்ளது.  

 நபார்டு வங்கி மூலம் 16 கோடியில் தென்னை பூங்கா அமைக்க செண்பகராமன்புதூரில் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைவிட சிறந்த இடம் வேறு எங்காவது கிடைக்குமா எனவும் ஆய்வு செய்து வருகிறோம். நமது மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் குமார் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக பதவிஏற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. குமரி மாவட்டத்துக்கு நீரா எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டுறவு சங்க இணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீரா எடுப்பதால் குமரி மாவட்டம் புதிய வடிவம் பெறும். இதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த அனுமதியை பயன்படுத்தி கள் இறக்கினால் நீராவுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் நிலை உருவாகும்.  குமரி மாவட்டம் 10 வருடங்களில் வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாறும். அதற்காக கட்டுமான பணிகள், சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் பஸ் போர்ட் அமைக்கப்படுகிறது. இதில் ஒன்று நாகர்கோவிலில் அமைகிறது. குமரியில் துறைமுகம் வந்தே தீரும். குமரியில் விமான நிலையம் அமைக்கமுடியாது என கூறியுள்ளனர்.

 இருப்பினும் விமான நிலையம் அமைப்பதற்கு மீண்டும் குமரியில் ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மேலும் அனைத்து வீடுகளிலும் தொழிற்சாலை உருவாகவேண்டும். இதனால் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் இங்கு வந்து வேலை செய்யும் நிலை வரும். மார்த்தாண்டம் பாலத்தில் அடுத்த மாதம் போக்குவரத்து தொடங்கப்படும். பார்வதிபுரம் மேம்பாலம் 75 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
 நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் ராஜீவ் பூஷன்பிரசாத், கேரள தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் மோகன்ராஜ், தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழக ஆராய்ச்சிப் பணிகளின் இயக்குநர் ராமராஜூ, தமிழ்நாடு வேளாண்மை கூடுதல் இயக்குநர் நிஜாமுதீன், தென்மை ஆராய்ச்சி நிலையம் தலைவர் கார்த்திகேயன், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ponnathirakrishnan ,district ,Kumari ,Coconut Park Conference ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!