×

கள்ளிக்குடி பகுதியில் கண்மாய்கள் வறண்டதால் நெல் விவசாயம் பாதிப்பு

திருமங்கலம், நவ.12:  கள்ளிக்குடி பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்கள் வறண்டு ேபானதால்  நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை இந்தாண்டு ஓரளவு கைகொடுத்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் தாலூகாவில் பெய்த அளவிற்கு கள்ளிக்குடி தாலூகாவில் மழைப்பொழிவு இல்லை.
இதனால் கள்ளிக்குடி பெரியகண்மாய், குராயூர் கண்மாய், வில்லூர் கண்மாய், எஸ்பி நத்தம் கண்மாய், வெள்ளாகுளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

கள்ளிக்குடி பகுதியில் அதிகளவில் நெல்விவசாயம் நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்பு இந்தாண்டு கள்ளிக்குடி பகுதியில் போதிய மழையில்லாததால் முக்கிய கண்மாய்கள் அனைத்து வறண்டு போனது. இதனால் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து குராயூரைச் சேர்ந்த விவசாயிகள் சிவா, கண்ணன், பால்சாமி கூறுகையில், ‘`கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. அதே நேரத்தில் கள்ளிக்குடி பகுதி கண்மாய்களுக்கு நீர்வரத்து பெரும்பாலும் டி.கல்லுப்பட்டி பகுதியையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மழையடிவாரத்திலிருந்து தான் கிடைக்கும்.

இந்த ஆண்டு அந்த பகுதியில் போதுமான அளவு மழையில்லை. மேலும் வில்லூர், கள்ளிக்குடி, குராயூர் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு வரும் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. போதுமான மழையில்லாததால் தடுப்பணைகளை தாண்டி மழைநீர் கண்மாய்க்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள திருமங்கலம் தாலூகாவில் பெய்த அளவிற்கு கள்ளிக்குடியில் மழையில்லை. இது போன்ற காரணங்களால் கள்ளிக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்மாய்கள் வறண்டு போயுள்ளன. இதனால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய் தண்ணீர் இருந்தால் இந்நேரம் விவசாயிகள் நாற்றுநட்டு விவசாயப் பணிகளை துவக்கி இருப்போம்’’ என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...