×

தூய்மைப் பணி புறக்கணிப்பு அக்னிதீர்த்த கடலில் எங்கும் குப்பைமயம்

ராமேஸ்வரம், நவ. 8: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் கலக்கும் கழிவுநீராலும், கடற்கரையில் குவிந்துள்ள குப்பை கழிவுகளாலும் நேற்று தீர்த்தமாடிய பக்தர்கள் அருவருப்புடன் புனித நீராடிச் சென்றனர். மாவட்ட நிரவாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.
ராமேஸ்வரத்தில் சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் நகரில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் ஓடியது. அக்னிதீர்த்த கடற்கரையில் சுத்திரிகரிப்பு கிணற்றில் சென்று சேரும் கழிவுநீரும் கால்வாய் அடைப்பினால், கடற்கரையில் வெளியேறியது. இதனால் அக்னிதீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடும் கடல் பகுதியில் நேற்று காலை சாக்கடை கழிவுநீர் வெளியேறி பல இடங்களில் கடலில் கலந்தது.
மேலும் தீர்த்தமாடும் பகுதியில் கடலோரத்தில் ஒதுங்கிய கடல் பாசியும், கடற்கரையில் புரோகிதர்களால் தர்ப்பணம் செய்யப்பட்டு பக்தர்களால் கடலில் வீசப்பட்ட ஈரத்துணிகள், பூஜைப்பொருட்களும், பிளாஸ்டி, பாலிதீன் பைகள் போன்ற கழிவுப்பொருட்களும் குவிந்து கிடந்தது. பல நாட்களாக அகற்றப்படாமல் கடற்கரை முழுவதும் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசியது.
ஐப்பசி மாத அமாவாசை நாளான நேற்று அக்னிதீர்த்த கடலில் அதிகாலை முதல் புனித நீராடிய பக்தர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு அருவருப்புடன் கடலில் தீர்த்தமாடினர்.  ராமேஸ்வரம் நகராட்சியில் நகர் முழுவதும் குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் இதில் போதிய கவனம் செலுத்தாததால் அக்னி தீர்த்த கடற்கரையில் குப்பைக்கழிவுகள் குவிந்துள்ளது.
இதுபோல் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்நிலை தொடர்கிறது. அக்னிதீர்த்த கடலில் ஈரத்துணிகளை போடுவதற்கு மதுரை உயர் நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஆர்வத்துடன் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரும், நகராட்சி நிர்வாகமும் நாளடைவில் மெத்தனம் காட்டியது. பின்னாளில் நகராட்சி நிர்வாகம் ஈரத்துணிகளை துப்புறவு பணியாளர்களை கொண்டு அகற்றி வந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் கடற்கரையில் பூஜை காரியங்கள் செய்யும் புரோகிதர்களே அக்னி தீர்த்த கடற்கரையில் தூய்மைப் பணியை பாராமரித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவும் புறக்கணிக்கப்பட்டதால் அக்னிதீர்த்த கடற்கரையில் குப்பை கழிவுகள் போடுவதும், கடலில் ஈரத்துணிகளை போடுவதும் தொடர்கிறது. புண்ணியம் தேடி ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் புனித நீராடிச் செல்லும் அக்னிதீர்த்த கடற்கரையின் சுகாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : anywhere ,ocean ,
× RELATED சிவகங்கை மாவட்டம் கீழடியில்...