×

கேதார கவுரி நோன்பு : கோயில்களில் பெண்கள் சிறப்பு பூஜை

திருவள்ளூர், நவ. 8: கேதார கவுரி விரதத்தையொட்டி நேற்று கோயில்களில் கேதாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு நோன்பு பலகாரம் வைத்து வழிபட்டனர்.சிவனுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கவுரி விரதம் மிகவும் முக்கியமானதாகும். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து சிவனின் உடம்பில் ஐக்கியமாகி அர்த்தநாரியாக பாதி உடம்பை பெற்ற விரதமாகும். இந்த நோன்பு ஐப்பசி மாத அமாவாசையில் வருகிறது.தீபாவளி மறுநாளில் ஐப்பசி அமாவாசையன்று கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கேற்றி பழவகைகள், பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் வைத்து படைப்பார்கள். அப்பமும், அதிரசமும்தான் இதில் முக்கிய இனிப்பு வகைகள் ஆகும்.
நோன்பு சட்டியில் 21 அதிரசம் வைத்து அதனுடன் நோன்பு கயிற்றையும் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, வந்திருப்பவர்களுக்கு பிரசாதமும், நோன்புக் கயிறும் கொடுத்து உபசரிப்பார்கள். பக்தி சிரத்தையுடன் கேதார கவுரி விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்யம் உண்டு என்பது ஐதீகம்.
இதையொட்டி திருவள்ளூர் திரவுபதி அம்மன் கோயில், தீர்த்தீஸ்வரர் கோயில், ஜலநாராயணர் கோயில், வல்லப விநாயகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், விரதம் மேற்கொண்ட திரளான சுமங்கலி பெண்கள், நோன்பு கயிறு, தேங்காய், மஞ்சள், கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம் நைவேத்தியமாக சமர்ப்பித்து, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து வீட்டிற்கு சென்று நோன்பு  சட்டியை வைத்து படையலிட்டு நோன்பு கயிறை கையில் கட்டிக்கொண்டு விரதத்தை முடித்தனர். சிலர் வீடுகளிலேயே இந்த பூஜையை மேற்கொண்டனர்.

Tags : Kathar Kauri ,women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...