×

வகுப்பறையில் போதை பொருட்கள் பறிமுதல் : 24 மாணவர்கள் வெளியேற்றம்

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கத்தில், வகுப்பறையில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 24 மாணவர்களை வெளியேற்றியதை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, 12ம் வகுப்பில் ஒரு பிரிவில், 24 மாணவர்கள் படித்து வருகின்றனர்கடந்த வாரம், இவர்களது வகுப்பறையின் மேசைக்கு அடியில் போதை பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் கவர் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்  உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின்போது, எவரும் சரியான பதிலளிக்கவில்லை. இதனால், 24 பேரும் வகுப்பறையை விட்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது, ‘‘இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்’’ என்று எழுதி கொடுத்தால் தான் வகுப்பறைக்கு அனுமதிப்போம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஒரு சிலர் எழுதிக் கொடுத்து விட்டு வகுப்பறைக்குள் சென்றனர். மற்றவர்கள் அதுபோல், எழுதி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அப்போது, ‘‘யாேரா ஒருவர் செய்த தவறுக்காக அனைத்து மாணவர்களையும் எப்படி வெளியேற்றலாம்?’’ என்று, கேட்டு பெற்றோர் திடீரென பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முற்றுகை பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ‘இனி இவ்வாறு நடக்காது’ என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.

Tags : classroom ,expulsion ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...