×

வயதானவர்கள், 2வது திருமணம் செய்பவர்களை குறிவைத்து கைவரிசை மகளை மணப்பெண்ணாக காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி

* கேரள பெண் உட்பட 3 பேர் கைது * போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: திருமண தகவல் மையம் மூலம் பெண் பார்க்க வந்த நபரிடம் கத்தி முனையில் நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில், கேரளாவை சேர்ந்த பெண்  உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் காளிசரண் (43), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. எனினும் வரன் அமையவில்லை. இதனால் திருமண தகவல் மைய வெப்சைட்டில் பதிவு செய்து மணப்பெண் தேடினார். அதே வெப்சைட்டில் பதிவு செய்திருந்த காளிசரணை, பெண் வீட்டார் ஒருவர் தொடர்பு கொண்டு, ‘‘உங்களை எங்கள் குடும்பத்துக்கு பிடித்துள்ளது. நீங்கள் எங்கள் பெண்ணை நேரில் பார்க்க வர முடியுமா’’ என்று கேட்டுள்ளனர். உடனே, பெண்ணின் புகைப்படத்தை காளிசரணுக்கு அனுப்பினர். அந்த பெண் அழகாக இருந்ததால் நேரில் பார்க்க வடபழனி பூந்தமல்லி சாலையில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு முகவரிக்கு அழைத்துள்ளனர்.

வருங்கால மனைவியை பார்க்க காளிசரண் புதிய ஆடை, 2.5 சவரன் செயின், அரை சவரன் மோதிரம் அணிந்து, தனியாக கடந்த 23ம் தேதி அந்த இடத்திற்கு சென்றுள்ளார். பெண் உட்பட 4 பேர் அவரை மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். பின்னர் இளம்பெண்ணிடம் தேனீர் கொடுத்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென காளிசரண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், ஐ-போன், 2 ஏடிஎம் கார்டுகளை பறித்து கொண்டு கொலை மிரட்டல்விட்டு தப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத காளிசரண் அதிர்ச்சியடைந்தார். பின்னர், வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சர்வீஸ் அடுக்குமாடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பிய நபர்களை தேடினர். மேலும், காளிசரணுக்கு அவர்கள் வாட்ஸ் அப்பில் பெண்ணின் புகைப்படம் அனுப்பிய எண்ணை ைவத்து தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, கோடம்பாக்கத்தில் மோசடி கும்பல் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது. உடனே, போலீசார் விரைந்து சென்று அதிரடியாக கேரள மாநில எர்ணாகுளத்தை சேர்ந்த சாவித்திரி (52), அவரது மகன் சிவா (38) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி மாதவரத்தில் வசித்து வந்த சாவித்திரியின் சகோதரி மகன் கோகுலகிருஷ்ணன் (32) என்பவனையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரியாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பின்னர் மூன்று பேரையும் போலீசார் வடபழனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, பல அதிர்ச்சி தகவல் வெளியாகியது. கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: தனது சகோதரி மகன் கோகுல கிருஷ்ணன் சென்னையில் வசித்து வந்ததால், அவர் மூலம் தனது மகன் சிவா, மகள் பிரியா ஆகியோருடன் கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சாவித்திரி குடியேறினார். கோகுல கிருஷ்ணன் திருமண புரோக்கராக தொழில் செய்து வருகிறார். இதனால் மேட்ரி மோனியில், இரண்டாவது திருமணம் செய்து கொள்வோர், 40 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத நபர்களை தேடி அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை எடுத்து கொள்வார். பின்னர், அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு தெரிந்த குடும்பத்தில் அழகான பெண் உள்ளார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் பெண் பார்க்க வர முடியுமா என்று கூறுவார். அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து, தனது பெரியம்மா சாவித்திரியின் மகள் பிரியாவின் புகைப்படத்தை அவர்களின் வாட்ஸ் அப்புக்கு அனுப்புவார்.

அவர், நடிகை போல் அழகாக இருப்பதால் மணமகன் பெண் பார்க்க வருவதாக கூறுவார்கள். அவர்களிடம் முதலில் மணமகன் நீங்கள் மட்டும் பெண்ணை பார்த்து விட்டு பிடித்திருந்தால் வேரு ஒரு நாளைக்கு உங்கள் பெற்றோரை அழைத்து வந்து நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்பர்.
அப்போது, மணமகன் வர வேண்டிய இடத்தை கோகுல கிருஷ்ணன் தெரிவிப்பார். அதை நம்பி தனது வருங்கால மனைவியை பார்க்க வரும் போது, கோகுல கிருஷ்ணன் தனது பெரியம்மா மகள் பிரியாவிடம் தேனீர் கொடுப்பார்கள். பெண்ணிடம் பேச வேண்டும் என்றால் சிறிது நேரம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறி ஒரு அறைக்கு அனுப்புவார்கள். இருவரும் உள்ளே சென்று பேசிக்கொண்டிருக்கும்போது, கோகுல கிருஷ்ணன் தனது பெரியம்மா மகன் சிவாவுடன் சேர்ந்து கத்திமுனையில் மிரட்டி பெண் பார்க்க வந்த நபரிடம் நகை, பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிடுவார்கள்.

நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் அசிங்கம் என்று நினைத்து யாரும் புகார் அளிக்காமல் உயிர் பிழைத்தால் போதும் என்று சென்று விடுவார்கள். இதுபோல், கோகுல கிருஷ்ணன் தனது உறவினர்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட ஆண்களை மிரட்டி பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது. பெண் பார்க்க வந்த நபர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேல் என்பதால் இந்த மோசடி கும்பல் மீது யாரும் புகார் அளிக்க வில்லை. அதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொடர் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காரை பறிகொடுத்த முதியவர்
கோவையை சேர்ந்த முதியவர் ஒருவர் 2வது திருமணம் செய்ய மேட்ரி மோனியில் மணமகளை தேடினார். அவரை சாவித்திரி செல்போனில் ெதாடர்பு கொண்டு தனது மகளை கொடுக்க சம்மதம் தெரிவித்து தனியாக அழைத்துள்ளார். அதை நம்பி அந்த முதியவர் கடந்த 13ம் தேதி கோவை காட்டூர் பகுதிக்கு காரில் வந்துள்ளார். அப்போது, அவரிடம் கத்தி முனையில் மாருதி ஆல்டோ கார், டேப், செல்போன் மற்றும் ₹15 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தும் விசாரணையில் தெரியவந்தது. இதுபோல் பலரிடம் மோசடி செய்ததாக பள்ளிக்கரணை, அம்பத்தூர், கொரட்டூர், ஜாம்பஜார், கிண்டி, தாம்பரம், வேளச்சேரி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு ெசய்யப்பட்டது. கைது செய்யப்பட்டதும், சாவித்திரி ஒரு முறையும் கோகுலகிருஷ்ணன் மூன்று முறையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிந்தது.

Tags : elderly ,bridegroom ,bride ,millions ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு