×

அஞ்செட்டியில் ஏரியை தூர்வாரும் பணி துவக்க விழா

தேன்கனிக்கோட்டை, நவ.1:  அஞ்செட்டியில் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது. தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டியில், 64 ஏக்கர் பரப்பளவில் உள்ள நல்லான் சக்கரவர்த்தி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் நீர்பிடிப்பு பகுதிகள் மண்மேடாக மாறி, மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் குட்டைபோல் காணப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழையில் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், ஆக்கரமிப்பு காரணமாக, உபரிநீர் வீணாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சென்று கலந்தது. ஏரியை தூர்வாரி முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அஞ்செட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஓசூர் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் நிதி உதவியுடன், வாத்ஸல்யா அறக்கட்டளை சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி துவங்கியது. வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவா, மண்டல துணை வட்டார ஊராட்சி அலுவலர் மணி, ஓசூர் மக்கள் சங்கம் தலைவர் பிரசாத், லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் கிராம மக்கள், விவேகானந்தா பயிற்சி மைய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வாத்ஸல்யா அறக்கட்டளை அறங்காவலர் கௌதமன் செய்திருந்தார்.

Tags : opening ceremony ,lake ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!