×

கரூரில் கோயிலுக்கு சொந்தமான 73 ஏக்கர் நிலம் மீட்பு திருத்தொண்டர் சபை தகவல்

கரூர், நவ.1:  கரூரில் கோயிலுக்கு சொந்தமான 73 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தொண்டர் சபை நிறுவனர் தெரிவித்தார். திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கரூர் ஈசுவரன்கோயில் வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மீட்டெடுக்க திருத்தொண்டர் சபை, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு, அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து சட்டரீதியாக போராடி வருகிறது. மாவட்டம் தோறும் ஆய்வு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 350 நபர்களது தனிப்பட்டாக்களை ரத்து செய்து நிலத்தை மீண்டும் கோயிலுக்கு வழங்கியுள்ளது. டிஆர்ஓ, ஆர்டிஓ இதனை வழங்கினர். நிலத்தின் பரப்பளவு 73 ஏக்கர். மதிப்பு சுமார் ரூ.1000 கோடி என மதிப்பிடப்படுகிறது. மீட்கப்பட்ட சொத்துக்கள் வெண்ணைமலை, காதப்பாறை, ஆத்தூர் ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள்.

இந்த நிலங்கள் அனைத்தும் திருக்கோயிலுக்கு சொந்தமானது எனஅறிவிப்பு பலகை வைப்பதோடு முழுமையாக கொண்டுவரப்பட்டு உரிய பதிவேடுகளிலும் பதிவு செய்யப்படும். அனைத்து கோயில் சொத்துக்களும் முழுமையாக மீட்கப்படும். கரூரில் மொத்தம் 4ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அனைத்தும் விரைவில் மீட்கப்படும். சட்டப்பூர்வமாக கரூர் மாவட்டத்தில் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு கட்டளைக்கு, அன்னதானம், குடிநீர் என பல தர்மங்களுக்காக எழுதி வைத்துள்ள கட்டளை சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்படும். கோயில் சொத்துக்களைப் பொறுத்தளவில் வாங்கவோ, விற்கவோ முடியாது. எத்தனை ஆண்டுகளானாலும் விற்றாலும் வாங்கினாலும் செல்லாது. பலர் வாங்கி ஏமாந்துவிடக் கூடாது.

தமிழகம் முழுவதும் சுமார் 5லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட இருப்பதாக கொள்கை விளக்க குறிப்பில் உள்ளது.  கட்டளை சொத்துக்கள் மேலும் 5லட்சம் ஏக்கர் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்க கோரப்பட்டுள்ளது. மேலும் நில அளவைத்துறை, காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகம, நகர்ஊரமைப்புத் துறை, மின்வாரிய அலுவலர்களைக் கொண்டு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Acres Land Reclamation Board ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...