×

மழைக்காலத்தையொட்டி கரூரில் கொசுவலை உற்பத்தி மும்முரம் பாரம்பரிய உற்பத்திக்கு ஊக்கமளிக்க வலியுறுத்தல்

கரூர், நவ.1: மழைக்காலத்தையொட்டி கொசுவலை உற்பத்தி மும்முரமாக நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கு அடுத்து கொசுவலைத்தொழில் உள்ளது. பாலிஎத்தலின் என்ற மூலப்பொருளில் இருந்து கொசுவலைகள் பாரம்பரியமாக இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. கொசுவலை நூல் தயாரிப்புக் கூடங்கள் தனியாகவும், கொசுவலைத்துணி தயாரிப்புக் கூடங்கள் தனியாகவும் செயல்படுகின்றன. கொசுவலைகளை மீட்டர் கணக்கில் வாங்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். வட மாநிலங்களில் தான் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் கொசுவலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் வடமாநில தொழிலாளர்கள். தற்போது மழைக்காலம் என்பதால் கொசுவலை உற்பத்தியானது மும்முரமாக நடைபற்று வருகிறது. வடமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக இரவு பகலாக கொவலை உற்பத்திக் கூடங்களில் தறிகள் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. எனினும் கொசுவலைத் தொழில் பல்வேறு சவால்களை சந்தித்தே வருகிறது.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், மூலப்பொருள் விலைஉயர்வு மற்றும் வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கம் வழியாக கள்ளத்தனமாக கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவதால் தொழில் முன்புபோல இல்லை. வங்கதேசத்தில் இருந்து எவ்வித வரியுமின்றி கொண்டுவருவதால் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. கரூரில் ரசாயன கொசுவலைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டிலேயே விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படுவதோடு பாரம்பரிய கொசுவலைகளுக்கும் கிராக்கி இல்லாமல் போய்விடுகிறது. வாங்குவோரும் குறைந்த விலைக்கு கிடைத்தால் போதும் என வாங்கிக்கொண்டு போய் விடுகின்றனர். அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி பாரம்பரிய கொசுவலை உற்பத்திக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ரசாயன கொசுவலை விற்பனையை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

Tags : monsoon ,Karur ,
× RELATED கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்