×

திருத்தங்கல்லில் ஆக்கிரமிப்பால் அகலம் குறைந்த சாலை போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் திணறல்

சிவகாசி, நவ. 1: திருத்தங்கல் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, நகராட்சியில் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சியில் உள்ள ரதவீதி, விருதுநகர் ரோடு, வெள்ளையாபுரம் ரோடு ஆகிய இடங்களில் கட்டிங்கள், கடைகள், மேற்கூரை அமைத்து ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக வாகனங்கள் செல்வதில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், குறுகிய சாலைகளாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விருதுநகர் ரோட்டில் பெரியார் சிலையில் இருந்து மாரியம்மன் கோயில் வரை உள்ள கடைகளில் மேற்கூரை, ஸ்டால் அமைத்து ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை அருகே ஆட்டோ நிறுத்தம் செயல்படுகிறது. இங்குதான் வெளியூர் பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், போக்குவரத்து அதிகமான நேரங்களில் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த சாலை 35 அடி வரை அகலமுடையது. ஆனால் கடைகள், ஸ்டால்கள், மேற்கூரைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருத்தங்கல்லை சேர்ந்த அருன்பாண்டி கூறுகையில், ‘திருத்தங்கல்லில் அகலம் குறைந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். குறுகிய சாலைகளால் அடிக்கடி போக்குவரதது நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நகரின் முக்கியச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : motorists ,Edinburgh ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...