×

திண்டுக்கல்-தாடிக்கொம்பு ரோட்டில் நீ....ண்ட இழுபறிக்குப்பிறகு ரயில்வே மேம்பாலம் திறப்பு

திண்டுக்கல், நவ.1: நீண்ட இழுபறிக்குப்பிறகு திண்டுக்கல் அங்குநகர் ரயில் மேம்பாலம் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.
திண்டுக்கல்-தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள அங்குநகரில் பழநி வழித்தட ரயில்வே கேட் அமைந்துள்ளது. கரூர், சேலம், பெங்களூரூ உள்ளிட்ட பெருநகரங்களுக்கான பிரதான பாதை என்பதால் போக்குவரத்து அதிகம் இருக்கும். மேலும் பழநியில் இருந்து பாலக்காடு, கோவை, மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதால் இந்த கேட் மூடப்படும் போதெல்லாம். வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும். ரயில் சென்ற பிறகும் நெரிசல் தீர பல நிமிடங்கள் ஆகும்.இப்பகுதிக்கு அருகில்தான் கலெக்டர், எஸ்பி.அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இருப்பதால் அடிக்கடி மூடப்படும் கேட்டினால் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மூன்று ஆண்டிற்கு முன்பு ரூ.20.35 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.கடந்த சில மாதங்களுக்கு முன்பே பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இருப்பினும் பயன்பாட்டிற்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. விவிஐபி.க்களின் தேதிக்காக கட்டப்பட்ட பாலம் அப்படியே பயன்பாடின்றி கிடந்தது.
இதனால் பலரும் இது குறித்து புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று இப்பாலத்தை சென்னையில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். வனத்துறை அமைச்சர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். 634.4மீட்டர் நீளமுள்ள இப்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆர்வமாக இப்பாலத்தை பயன்படுத்தத் துவங்கினர். கலெக்டர் வினய், எஸ்பி.சக்திவேல் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினர். இப்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து தாடிக்கொம்பு, வேடசந்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வாகன நெரிசல் வெகுவாய் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. எம்பி.உதயகுமார், கோட்டப்பொறியாளர்(நெடுஞ்சாலை திட்டங்கள்) கேந்திராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : road ,Dindigul-Thadikkombu ,railway ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...