×

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

வீரவநல்லூர், நவ.1:   சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் 44 படுக்கை வசிதிகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப்பகுதிகளான கூனியூர், காருகுறிச்சி, புதுக்குடி, சக்திகுளம், தெற்கு அரியநாயகிபுரம், சங்கன்திரடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.  இந்த மருத்துவமனையில் பெண்கள் வார்டை ஒட்டி பெரிய அளவிலான பட்டுப்போன வேப்பமரம் உள்ளது. கிளைகள் வலுவிழந்த நிலையில் உடைந்து விழும் தருணத்தில் உள்ள இந்த மரமானது சாய்ந்தால் பெண்கள் வார்டு பகுதியில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோல் இந்த கட்டிடத்தின் வடபகுதியில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி மற்றொரு பட்டுப்போன மரம் உள்ளது. இந்த மரமும் சாய்ந்தால் பெண்கள் வார்டு பகுதி மேலும் சேதமடையும் நிலை உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் போதிய பராமரிப்பு குறைவு காரணமாக கட்டித்தின் மேல் அரசமரம் சுவர்களில் விரிசலை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறது. இதனை அப்புறப்படுத்தாவிட்டால் நீர்க்கசிவு ஏற்பட்டு கட்டிடம் இடிந்துவிழும் நிலையும் ஏற்படும்.  வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நோயாளிகளின் நலன்கருதி இந்த இரு பட்டுப்போன மரங்களையும், மாடியில் வளரும் அரசமரத்தையும் பாதுகாப்பாக வெட்டி அப்புறப்படுத்தவேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கையாகும். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோது, ‘பட்டுப்போன மரங்களை வெட்டுவதற்கு டென்டர் விடப்பட்டு 1 மாதம் கடந்துவிட்ட நிலையில் இதுவரை அகற்றப்படவில்லை’ என வேதனை தெரிவித்தனர்.

Tags : Cheranmakadevi ,government hospital ,
× RELATED சேரன்மகாதேவியில் கோயில் கொடை விழாவில் மோதல்