×

கடத்தல்காரர் இல்லை என தெரிந்த பின்னரும்சுங்க அதிகாரிகளை எதிர்த்து பேசிய தங்க நகை ஏஜென்ட் அதிரடி கைது: ‘மானநஷ்ட வழக்கு போடுவேன்’ என்றதால் கிடுக்கிப்பிடி

சென்னை, நவ.1: விமானம் மூலம் நகை கடத்தி வந்ததாக கூறி நடந்த விசாரணையில், வாலிபர் நிரபராதி என தெரிந்தது. சுங்க அதிகாரிகளை எதிர்த்து பேசியதால், பொய் புகார் மூலம் அவரை சிறையில்  அடைத்தனர்.சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் வழியாக நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை  நடத்தினர். அப்போது, சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சாகுல்அமீது (28) என்பவர், திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக அந்த விமானத்தில் வந்தார். அவர், கன்வேயர்  பெல்ட்டில் இருந்த தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றார்.அப்போது அவரை தடுத்த சுங்க அதிகாரிகள், சோதனை நடத்த வேண்டும் என கூறினர். அதற்கு, நான் உள்ளூர் பயணியாக வந்துள்ளேன். என்னிடம் எவ்வித பொருட்களும் இல்லை என கூறியுள்ளார்.  ஆனால், அதிகாரிகள், அவரை விடாமல் பிடித்து துருவி துருவி விசாரித்தனர்.அதற்கு, வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்யாமல், என்னை எப்படி விசாரிக்கலாம், சோதனை செய்யலாம் என அந்த வாலிபர் கேட்டார். மேலும், திருவனந்தபுரம் விமான  நிலைத்தில் வாங்கிய போர்டிங் பாசையும் காண்பித்தார். ஆனாலும், அதிகாரிகள் அவரது சூட்கேசை வலுக்கட்டாயமாக வாங்கி திறந்து பார்த்தனர்.அதில், ₹25 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் எடையுள்ள தங்க காப்புகள் இருந்தன. அதுபற்றி கேட்டபோது, ‘‘நான் தங்க நகை ஏஜென்ட். திருவனந்தபுரத்தில் மொத்தமாக நகைகளை வாங்கி,  சென்னையில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்கிறேன்’’ என கூறியுள்ளார்.

மேலும், அந்த நகை வாங்கியதற்கான ரசீதுகளையும் அதிகாரிகளிடம் கொடுத்தார். அதை ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் வாங்கிய நகை என்றும், அதற்கான வரி  செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிந்தது. ஆனாலும் அதிகாரிகள், சாகுல் அமீதை விடவில்லை. இந்த நகை வாங்குவதற்கான பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது. அதை யார் கொடுத்தது என  கேட்டனர். மேலும், விமான நிலைய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, நகை வாங்கிய பணத்துக்கான வரி  செலுத்தியது, வங்கி கணக்கு உள்பட அனைத்தையும் அவர் கொடுத்தார். இதனால், தங்கம் கடத்தி வரவில்லை என தெரியவந்தது.அதன்பின்னர் சாகுல்அமீது, ‘‘நான் வியாபாரம் விஷயமாக திருவனந்தபுரம் சென்று, சென்னை திரும்புகிறேன். உள்ளூர் பயணியாக வரும்போது எப்படி கடத்த முடியும். நீங்கள் எனது நேரத்தை  வீணாக்கியதுடன், பலர் முன்னிலையில் குற்றவாளியைபோல் நிறுத்தி, தேவையில்லாத கேள்விகள் கேட்டு டார்ச்சர் செய்தீர்கள். இதனால், உங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்’’  என ஆவேசமாக கூறினார்.இதனால், ஆத்திரமடைந்த அதிகாரிகள், விமான நிலைய போலீசில், வாலிபர் சாகுல் அமீது மீது புகார் அளித்தனர். அதில், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாகவும்,  கேவலமான வார்த்தைகளாலும் திட்டினார் என கூறியிருந்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாகுல் அமீதை கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகைக்கான ஆவணங்கள், ரசீதுகள் உள்ளதால், அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. சாகுல் அமீது ஜாமீனில் வெளியே வந்து, அதனை முறைப்படி கோர்ட்டில் பெற்றுக் கொள்ளலாம் என கோர்ட்  கூறியது.

Tags : kidnappers ,
× RELATED ரூ1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை வேர்கள் சிக்கியது: கடத்திய 4 பேர் கைது