×

‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கையுடன் மாநகர பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்: தீபாவளியை முன்னிட்டு கமிஷனர் அதிரடி உத்தரவு

கீழ்ப்பாக்கம், நவ. 1: சென்னை முழுவதும், ‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கையுடன் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட, மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சென்னை தி.நகர், புரசைவாக்கம் உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவங்களை தடுக்க கேமராக்களை பொருத்துமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே உள்பட பல்வேறு வணிக பகுதிகளில் கடந்த வாரம் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளில் சிறப்பு அதிரடி படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இவற்றின் ஒரு பகுதியாக மாநகர பேருந்துகளில் பிக்பாக்கெட் சம்பவங்களை தடுக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’’, சென்னை நகர காவல்துறை எனும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு, நேற்று முன்தினம் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், கமிஷனர் அறிவுரைப்படி கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் நேற்று முன்தினம் மாலை முதல் கீழ்ப்பாக்கம், வேப்பேரி, அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் மாநகர பேருந்துகளிலும் ஜேப்படி திருடர்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை போலீசார் ஒட்டினர். இதுவரை 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன என காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : thieves ,
× RELATED முகப்பேரில் 17 சவரன் கொள்ளையில் கோவையில் 3 கொள்ளையர் கைது