கொலை திட்டம் தீட்டியபோது துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது: காசிமேட்டில் பரபரப்பு

சென்னை, அக். 31: காசிமேடு காசிபுரம் ‘ஏ’ பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் தேசப்பன் (32). பிரபல ரவுடியான இவர் மீது காசிமேடு, மீன்பிடி துறைமுகம், ராயபுரம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குகளில் சிக்கி 13 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்த தேசப்பன் தலைமறைவானார். இந்நிலையில், காசிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், காசிமேடு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட தனிப்படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து, உள்ளே இருந்த தேசப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கவுதம் (28), வேலுமணி (30), சக்திவேல் (32) ஆகிய 4 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டிவந்தது தெரிந்தது.

Related Stories:

>