×

ஆன்லைனில் போலி பேரீச்சம்பழம் விற்பனை: 3 பேர் பிடிபட்டனர்

திருச்சி, அக். 30: திருச்சி அருகே ஆன்லைனில் போலி பேரீச்சம்பழம் விற்பனை செய்த புகாரின்பேரில் 380 பேரீச்சம்பழ பாக்கெட்டுகள் மற்றும் லோடுவேன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மும்பையை தலைமையிடமாக கொண்டு சீமா டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழத்தின் தமிழக விற்பனை பிரதிநிதியாக மகாராஷ்டிரா மாநிலம் ஈராரோடு கிழக்கு பகுதியை சேர்ந்த ஜவேத்ரஷா(50) என்பவர் உள்ளார்.  
இந்நிலையில் திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டையில் உள்ள நேசம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆன்லைனில் கிமியா டேட்ஸ் பேரிச்சம்பழங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரங்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுபற்றி அறிந்த தமிழக விற்பனை பிரதிநிதி  ஜவேத்ரஷா நமது கம்பெனி பேரீச்சம்பழங்களை எப்படி விலை குறைவாக தரமுடியும் என்று சந்தேகமடைந்து இதுகுறித்து திருவெறும்பூர் டிஎஸ்பி சேகரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து துவாக்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை நடத்த டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் அழகம்மாள் ஆலோசனைப்படி  ஜவேத்ரஷா நேசம் என்டர் பிரைசஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தான் தஞ்சையில் இருந்து பேசுவதாகவும், தனக்கு கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழம் 50 பாக்ஸ் வேண்டுமென்று ஆர்டர் கொடுத்துள்ளார். பேரீச்சம்பழம் பேக்குகள் எங்கே உள்ளது என்று கேட்டபோது அவர்கள் துவாக்குடியில் உள்ள பதப்படுத்தும் கிடங்கில் உள்ளதாக கூறியுள்ளனர். அதையடுத்து பதனிடும் குடோனை ஜவேத்ரஷா பார்த்தபோது அங்கு போலியான கிமியா பேரீச்சம்பழம் பேக்குகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அழகம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் அழகம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு பார்த்தபோது ஜவேத்ரஷா கொடுத்த ஆர்டருக்காக நேசம் என்டர் பிரைசஸ் ஆம்னி வேனில் டிரைவர் இர்பான்(20) கிமியா பேரீச்சம்பழ பெட்டிகளை ஏற்றியுள்ளார். அவரை ேபாலீசார் மடக்கிப்பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு விசாரணை நடத்தியதில், இர்பானின் சொந்த ஊர் காரைக்குடி, பத்தாளப்பேட்டையில் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் கூறி உள்ளார்.தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருச்சி பாபுரோட்டில் உள்ள டிரேடர்ஸ் மற்றும் காந்திமார்க்கெட் மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள பேக்கரியில் இருந்து பேரீச்சம்பழங்களை வாங்கி டெலிவரி செய்வதாக கூறினார். அதன்பேரில் துவாக்குடி போலீசார் அப்பு டிரேடர்ஸ் நிர்வாகி முத்துகுமார்(60) மற்றும் அட்சயா பேக்கரி நிர்வாகி கருப்பையா(39) மற்றும் இர்பானையும் கைது செய்து கடையில் இருந்த 380 பேரீச்சம்பழம் பெட்டிகளை பறிமுதல் செய்து மினி லோடு ஆட்டோவில் ஏற்றி துவாக்குடி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு