×

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைக்க வேண்டும் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, அக்.30: முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை  கலைத்துவிட்டு புதியதாக அமைக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் திரண்டு வந்து கோரிக்கை விடுத்தனர். முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்பு 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றனர். இப்பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் அரசு உயர் பதவிகளில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பள்ளியில் இயங்கி வந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக இயங்காததால் பள்ளி நிர்வாகம் பெயரளவில் மட்டுமே இருந்து வந்தது. இதனால் படிப்படியாக கல்வியின் தரமும் குறைந்தது மட்டுமல்லாது மாணவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது. தற்போது 400 மாணவர்கள் மட்டுமே இங்கு படித்து வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் அடிக்கடி கோஷ்டி மோதல் நடந்தன. இதனால் தினமும் மாணவர்களும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வரும் நிலைக்கு மாறியது. இதற்கிடையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த சண்முகம் மரணமடைந்தார்.

இதனையடுத்து அந்த பதவி காலியாகிவிட்டது. ஆனால், பள்ளி நிர்வாகம் இதுநாள் வரை தலைவரை தேர்ந்தெடுக்க  முன்வரவில்லை. இதனால் பள்ளியில் சமீபகாலமாக தொடர்ச்சியாக பல விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போதைய பிடிஏவை கலைத்துவிட்டு புதிய கமிட்டியை தேர்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும், முக்கிய பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்தது. இதனால் அதிருப்தியடைந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு திரண்டு சென்றனர். பின்னர் தலைமையாசிரியர் விஸ்வநாதனை சந்தித்து உடனடியாக தற்போதைய பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைத்துவிட்டு புதிய கமிட்டியை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த தலைமையாசிரியர் விஸ்வநாதன், முதலில் ஆசிரியர்கள் கூட்டம் நடத்திவிட்டு கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று 15 தினங்களுக்குள் புதிய பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து வந்த முன்னாள் மாணவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Parents Teacher College ,Higher Secondary School ,Muthupetu Government Men ,
× RELATED 48 வருடங்களுக்கு முன் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு