×

நேரடி நெல் விதைப்பு செய்தால் அதிக மகசூல் விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்

சேதுபாவாசத்திரம்,அக்.30: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பெருமகளூர்,சேதுபாவாசத்திரம், வீரியங்கோட்டை, பள்ளத்தூர், சோலைக்காடு,மருதங்காவயல் ஆகிய இடங்களில் நேரடி நெல் விதைப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா தலைமை வகித்து பேசி யதாவது: சேதுபாவாசத்திர வட்டார நன்செய் நிலங்களில் நெல் சாகுபடிக்கு தயார் செய்து நாற்று நடுவதற்கு பதிலாக, தற்போதுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு நன்செய் நிலங்களில் புழுதியில் நேரடி நெல் விதைப்பு செய்து சம்பா சாகுபடியை மேற்கொள்ள நல்லது. நல்ல மகசூலும் கிடைக்கும்.ஆற்று நீர்வரத்து காலதாமதம் ஆகும் காலத்திலும் எதிர்பார்த்த பருவமழை கிடைக்காத தருணத்திலும் வயலை புழுதியாக தயார் செய்து, நெல் விதைகளை நேரடியாக விதைப்பு செய்து பின்னர் ஆற்றுப்பாசனத்தில் நீர்வரத்து கிடைத்தவுடன் சேற்று நெல்லாக மாற்றி சாகுபடி செய்ய வேண்டும். மழை பெய்த பின்னர் 2 அல்லது 3 முறை நிலத்தை உழுது புழுதியாக்கி கொள்ள வேண்டும். மண் இறுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் இட்டு கடைசி உழவு செய்யப்பட வேண்டும்.

நேரடி நெல் விதைப்பிற்கு ஒரு ஏக்கருக்கு40 கிலோ சான்று பெற்ற விதைகள் தேவைப்படும். விதைகளை ஒரு சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாஷ் என்ற அளவில் கலந்து) 10-12 மணி நேரம் ஊற வைத்து பின் நிழலில் உலர்ந்த வேண்டும். விதைப்பதற்கு முன்பாக பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியா சூடோமோனாஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கவும். நிலத்தை நன்கு உழுது புழுதியாக்கி கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை கைதெளிப்பாகவோ அல்லது விதைக்கும் கருவியை கொண்டு ஒரு அங்குல ஆழத்தில் விதைக்கலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிக மகசூல் பெறலாம் என்றார். துணை வேளாண்மை அலுவலர் லட்சுமணன்,உதவி விதை அலுவலர் துரைராஜ்,பகுதி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : paddy sowing ,awareness meeting ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்