×

தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணத்தில் சிறப்பு புறக்காவல் நிலையம் திறப்பு

கும்பகோணம், அக். 30: தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரடி முன் கோட்ட காவல்துறை சார்பில் சிறப்பு காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையத்தை திறந்து வைத்து கும்பகோணம் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் பேசுகையில், பொதுமக்களுக்காக 24 மணிநேர சிறப்பு காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 6ம் தேதி வரை இம்மையம் செயல்படும். குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து பிடிப்பதற்கு நகரம் முழுவதும் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர நகர எல்லை பகுதிகள், பைபாஸ் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவற்றை ஒருங்கிணைத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீசார் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பர். பொதுமக்களுக்கு எந்த இடையூறு ஏற்பட்டாலும் காவல் உதவி மையத்தில் புகார் செய்யலாம். இங்கு 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பர். மேலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர். போக்குவரத்தை சரி செய்வதற்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 300 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்கள், என்எஸ்எஸ் மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். குறிப்பாக வரும் 3ம் தேதி முதல் காலை, மாலை நேரங்களில் முழுவதுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றார். இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், அருட்செல்வன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Special Outposts Station ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...