×

குஜிலியம்பாறை அருகே ஓட்டு கட்டிடத்திலே இயங்கும் ஒன்றிய தொடக்கப்பள்ளி

குஜிலியம்பாறை, அக். 30: குஜிலியம்பாறை அருகே செட்டியூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் சேதமடைந்துள்ளதால் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே படிக்கும் அவலநிலை உள்ளது. குஜிலியம்பாறை அருகே கருங்கல் ஊராட்சி டி.செட்டியூரில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 30 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 1962ம் ஆண்டு முதல் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் கடந்த 1994-95ம் ஆண்டு ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய நிதில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை பராமரிப்பு பணிகள் ஏதும் செய்யவில்லை. இதனால் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காங்கிரீட் முழுவதும் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. நாளடைவில் கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலைக்கு வந்து விட்டது.

இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழைய ஓட்டு கட்டிடத்திற்கே பள்ளி மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இதுநாள் வரை ஓட்டு கட்டிடத்திலே பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகளும் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மாணவர்கள் நனைந்தபடியே படிக்கும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலமாக குஜிலியம்பாறை ஒன்றிய நிர்வாகத்திற்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கிராமமக்கள் சார்பில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்கள் நலன் கருதி செட்டியூர் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Union Primary School ,building ,Gujuliyambaram ,Vedi ,
× RELATED குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து