×

நோயாளி கடும் அதிர்ச்சி பாதியிலேயே விட்டு ஓடிய ஊழியர் ஸ்ட்ரெச்சரை தள்ளிய உறவினர்கள்

மதுரை, அக். 30: மதுரை அரசு மருத்துவமனையின் 216வது வார்டிலிருந்த ஒரு நோயாளிக்கு ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர். ஸ்கேன் எடுப்பதற்காக அந்த நோயாளி, ேநற்று காலை  வார்டிலிருந்து 13ம் நம்பர் அறைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டுவரப்பட்டார். தற்போது  மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர், வீல் சேர் தள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் தனியார் நிறுவன பணியாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இவரை தனியார் நிறுவன பணியாளர் ஒருவரே ஸ்ட்ரெச்சரை தள்ளி வந்தார். ஸ்கேன் எடுக்குமிடத்தில் விட்டுவிட்டு, அந்த பணியாளர் திடீரென சென்றுவிட்டார். ஸ்கேன் எடுத்து முடிக்கும் வரை ஸ்ட்ரெச்சர் தள்ளி வந்த நபர் வரவில்லை. இதனையடுத்து நோயாளியை உறவினர்களே, ஸ்கேன் அறையிலிருந்து வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சருக்கு கொண்டு வந்து படுக்க வைத்தனர். அதன்பின் நீண்ட நேரமாகியும், ஸ்ட்ரெச்சரை தள்ளி வந்த பணியாளர் வரவில்லை. இதனால் நோயாளியும் அவரது உறவினர்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், ‘‘அவர் இனி வரமாட்டார்.

நீங்கள்தான் தள்ளிச்செல்ல வேண்டும்’’ என்று கூறினர். இதை தொடர்ந்து, நோயாளியின் உறவினர்களே ஸ்டெச்சரை தள்ளிச் சென்றனர். இவர்களுக்கு பாதையும் தெரியவில்லை, தள்ளிச் செல்லவும் தெரியவில்லை. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி, 113வது வார்டுக்கு அருகே உள்ள லிப்ட் வரை சென்றுவிட்டனர். அங்கிருந்து லிப்ட்டில் ஏற்றிச் சென்று ஒரு வழியாக வார்டுக்கு நோயாளியை கொண்டு சேர்த்துவிட்டனர்.  மருத்துவ ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ``மருத்துவமனையில் பெரும் அளவில் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. வீல் சேர் மற்றும் ஸ்டெச்சர்களை தள்ளிச்செல்லும் பணிகளில், சமீபகாலமாக தனியார் நிறுவன பணியாளர்கள்தான் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களை தேடி வார்டு வார்டாக அலைய வேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட வார்டுகளில் நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த வார்டுகளில் இருப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். பாதியில் விட்டுவிட்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : strangers ,patient ,strike ,
× RELATED வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல்